மக்களை மிரட்டும் நாட்டு வெடிகள் சைலண்ட் மோடில் மாவட்ட போலீஸ்
விழுப்புரம் : கோவில் திருவிழாக்கள், கட்சி ஊர்வலம், இறுதி ஊர்வலத்தின்போது, விதிகளை மீறி அதிக சத்தம் எழுப்பும் ஆபத்தான நாட்டு வெடிகள் வெடிப்பதால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில், சில கிராமங்களில் நடக்கும் கோவில் விழாக்களில் அனுமதியின்றி அதிகம் சத்தம் எழுப்பும் பெரிய நாட்டு வெடிகளை பயன்படுத்துகின்றனர். விழா துவங்கும் காலை முதல் சுவாமி வீதி உலா முடியும் நள்ளிரவு வரை வெடிகளை வெடிக்கின்றனர். அதிக சத்தம் எழுப்பும் பெரிய வெடிகளை வெடிக்கும்போது, அனுபவம் இல்லாத நபர்கள், சிறார்கள் வெடிப்பதால் ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் வெடிக்கும்போது, முதியவர்கள், குழந்தைகள் துாக்கம் இன்றி தவிக்கின்றனர். சில கிராமங்களில் தகராறும் நடக்கிறது. விழுப்புரம் நகர பகுதியில் அரசியல் கட்சி ஊர்வலம், இறுதி ஊர்வலத்தின்போதும், நாட்டு வெடிகள், சரவெடிகளை சாலையில் வெடிக்கின்றனர். இதனால் வாகனத்தில் செல்லும் மக்கள் வெடிக்கு பயந்து ஒதுங்கும்போது விபத்தில் சிக்கி கொள்கின்றனர். கடந்த காலங்களில், போலீசார் விதிமீறி அதிகம் சத்தம் எழுப்பும் நாட்டு வெடிகளுக்கு தடை விதித்தனர். பட்டாசு தயாரிப்பாளர்களிடமும் கடும் எச்சரிக்கை விடுத்தனர். தற்போது போலீசார் கண்காணிக்காததால், சர்வ சாதாரணமாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகர வீதிகளில் ஆபத்தான நாட்டு வெடிகள் வெடிக்கப்படுகிறது. பெரிய விபத்துகள் ஏற்படும் முன், இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.