உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

 பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடந்த விழாவில், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார். தொடரந்து, விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, லட்சுமணன், மஸ்தான் மற்றும் ரவிக்குமார் எம்.பி., முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில், 2025-26 கல்வியாண்டில் அரசு, நகராட்சி, ஆதிதிராவிடர் நல மற்றும் அரசு நிதியுதவி பெறும் 136 மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 8,125 மாணவர்கள், 8,795 மாணவியர் என மொத்தம் 16 ஆயிரத்து 920 பேருக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவர் சித்திக் அலி, சி.இ.ஓ., அறிவழகன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், மாவட்ட கல்வி அலுவலர் சேகர், துணை கலெக்டர் (பயிற்சி) கதிர் செல்வி, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (பயிற்சி) இளவரசி, பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா உட்பட பலர் பங்கேற்றனர்.

வாழ்க கோஷம்...

காரைக்குடியில் துணை முதல்வர் உதயநிதி, சைக்கிள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்ததும், விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், அதற்கான நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அப்போது, மாணவர்களிடையே பேசிய பொன்முடி எம்.எல்.ஏ., வாழ்க... வாழ்கவே, தமிழக முதல்வர் வாழ்கவே... வாழ்க... வாழ்கவே... சைக்கிள் கொடுத்த முதல்வர் வாழ்கவே. வாழ்க... வாழ்கவே... துணை முதல்வர் வாழ்கவே என கூறி, மாணவ, மாணவியர்களையும் கூற வைத்தார். அரசியல் கட்சிகளின் மாநாடு, ஆர்ப்பாட்டம் போன்று கோஷம் போட்டது பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ