நிவாரணத்திற்கு மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது சரியல்ல: பா.ம.க., அன்புமணி
திண்டிவனம்: ''தமிழகத்தில் கனமழை பாதிப்பு நிவாரணத்திற்கு, மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது சரியல்ல'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.திண்டிவனத்தில் மழை பாதித்த பகுதிகளை நேற்று காலை பார்வையிட்ட பா.ம.க., தலைவர் அன்புமணி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பெஞ்சல் புயலால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வட தமிழகத்தில் 12 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல கிராமங்கள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளனு. எந்த அதிகாரிகளும் அந்த பகுதிகளுக்கு செல்லவில்லை. மீட்பு பணிகளை அரசு வேகப்படுத்த வேண்டும்.தமிழக அரசு முழு கவனத்தையும் சென்னையில் செலுத்தியது. சென்னையில் 10 செ.மீ மழை தான் பெய்தது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி ,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 50 செ.மீட்டருக்கு மேல் மழை பொழிந்துள்ளது. இனி வரும் காலங்களில், காலநிலை மாற்றங்களால் இதுபோல் பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். காரணம் ஏரிகள், குளங்கள் துார் வரப்படவில்லை, வடிகால் வெட்டவில்லை, அதிக ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை போன்ற பகுதிகளில் நகரத்திற்குள் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. பல லட்சக்கணக்கான பயிர் பாதிப்படைந்துள்ளது. புயல் பாதிப்புக்கு உடனடியாக நிவாரணம் வழங்கி இருக்க வேண்டும். நிவாரண பொருட்களை முறையாக வழங்க வேண்டும். திண்டிவனம் ஏரிக்குள் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடந்தாண்டு கலெக்டருக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால், ஆட்சியாளர்கள் கேட்கவில்லை. இதில் அரசியல் பார்க்கிறார்கள். சுயநலத்திற்காக ஏரிக்குள் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் தான், நீர்நிலைகள் ஊருக்குள் வந்து குடியிருப்பு பகுதிகளை அடித்துச் செல்கின்றது. மழையால் பாதித்த ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம், வாழை பயிர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் என விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொடுத்தால், தமிழக அரசு கொடுக்கும் என்று கூறுகின்றனர். மத்திய அரசு எப்போது கொடுப்பது இவர்கள் எப்போது வழங்குவது. மத்திய அரசை எதிர்பார்ப்பது சரியல்ல.இவ்வாறு அன்புமணி கூறினார்.