உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அமைச்சர் போல் சாதிக்கும் எம்.எல்.ஏ., ;ஆச்சரியத்தில் உள்ளூர் உடன் பிறப்புகள்

 அமைச்சர் போல் சாதிக்கும் எம்.எல்.ஏ., ;ஆச்சரியத்தில் உள்ளூர் உடன் பிறப்புகள்

வி ழுப்புரம் மாவட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., ஒருவர், குறுகிய காலத்தில் பல்வேறு திட்டங்களை சாதித்து செயல்படுத்தி வருவது, சக கட்சியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விழுப்புரம் மாரவட்டத்தில், நீண்டகாலமாக அமைச்சர் பதவியின்றி தொடர்கிறது. அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., மீதான வழக்குகள், சர்ச்சை பேச்சுகள் காரணமாக அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மஸ்தான் எம்.எல்.ஏ.,வின் அமைச்சர் பதவியும் பறித்து, மாவட்ட செயலாளர் பதவி மட்டும் வழங்கியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில், தி.மு.க., 4 தொகுதிகளில் வென்று பலத்துடன் உள்ளது. பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், பின் தங்கிய விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் கூட இல்லை. இதனால், வளர்ச்சித் திட்டங்களை பேசி கொண்டு வருவதில், தாதமம் ஏற்பட்டு வருகிறது. அமைச்சரவை பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற தி.மு.க., வினரின் கோரிக்கையும் நிறைவேறாமல் உள்ளது. இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, தனது செல்வாக்கு காரணமாக, குறுகிய காலத்தில் பல அரசு திட்டங்களை கொண்டு வந்து, சக கட்சியினரே பொறாமைப்படும் வகையில் செயல்பட்டு வருகிறார். தொகுதியின் நீண்டகால கோரிக்கையான, அரசு கலை கல்லுாரியை கொண்டு வந்து, இந்தாண்டே கல்லுாரி தொடங்கி செயல்பட செய்துள்ளார். விக்கிரவாண்டியில் தீயணைப்பு நிலையம், நான்கு வழிச்சாலை மேம்பாலம், நந்தன் கால்வாய் புனரமைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அறிவிப்பு, சங்கராபரணி ஆற்றில் 30 கோடி ரூபாயில் தடுப்பணை, திருவாமாத்துார் கோவிலில் 4 கோடி ரூபாயில் மண்டபம் என பல புதிய திட்டங்களை தொகுதியில் கொண்டு வந்தார். மேலும், விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக, விழுப்புரம் கோவிந்தசாமி மணிமண்டபத்தில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி மையம், தமிழக அரசு சார்பில் வானுாரில் பாரதிதாசனுக்கு மணி மண்டபம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் காவல் நிலையங்களில் 50 ஆண்டுகள் கிடப்பில் இருந்த எல்லை பிரச்னை தீர்க்கப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டது. விக்கிரவாண்டி, காணை ஒன்றியங்கள் பிரித்து, புதிய கஞ்சனுார் ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆகியோரின் தீவிர விசுவாசியான அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., அடிக்கடி முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்பதோடு, அதனை துறை சார்ந்த செயலர்களிடம் அறிவுறுத்தி, திட்டங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளார். ஒரு அமைச்சர் செய்வதைப் போல், எம்.எல்.ஏ., பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது, பரபரப்பாக பேசப்பட்டாலும், உட்கட்சியில் புயலையும் கிளப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ