வட கிழக்கு பருவமழை தீவிரம் : தயார் நிலையில் உபகரணங்கள்
-நமது நிருபர்-விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க ஜெனரேட்டர், பொக்லைன் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரிகள், ஆற்றங்கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் 400, பொதுப்பணித்துறை சார்பில் 7000, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 13,000 மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பில் 700 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, மின்வாரியத்துறை சார்பில் 10 ஜெனரேட்டர், 12 மரம் வெட்டும் இயந்திரம், 35 பொக்லைன் இயந்திரம், 11,035 மின் கம்பங்கள், 52 டிரான்ஸ்பார்மர்கள், 200 டார்ச் லைட் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் 1550 ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், 5 பொக்லைன், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 220 பொக்லைன், 245 ஜெனரேட்டர்கள், 15 மரம் வெட்டும் இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மீன்வளத்துறை சார்பில், 50 மீட்பு படகுகள், தீயணைப்பு துறை சார்பில், 3 ஜெனரேட்டர், 15 மரம் வெட்டும் இயந்திரங்கள், 4 மீட்பு படகுகள், 25 டார்ச் லைட்டுகள், மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பில் 15 மரம் வெட்டும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இதேபோன்று, கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.