மாவட்டத்தில் 37,214 விவசாயிகள் மட்டுமே அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர்
விழுப்புரம் : மாவட்டத்தில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசின் பலன்களைபெற தனி அடையாள எண் பெற பதிவு செய்யவில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இந்த தாமதத்தினை தவிர்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பெற வசதியாக, அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழகத்தில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத்துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போது, அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்ற பணி நடைபெற்று வருகிறது.மாவட்டத்தில் 89 ஆயிரத்து 958 விவசாயிகள், பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர். இவர்களில் 37 ஆயிரத்து 214 பேர் மட்டுமே அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் விவரங்களுடன் வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையத்தை அணுகி, பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.