உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொடிக் கம்பங்கள், தலைவர் சிலைகளை அகற்றாததால் விக்கிரவாண்டியில் கிடப்பில் உள்ள மேம்பால பணி

கொடிக் கம்பங்கள், தலைவர் சிலைகளை அகற்றாததால் விக்கிரவாண்டியில் கிடப்பில் உள்ள மேம்பால பணி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வடக்கு பைபாஸில் சர்வீஸ் சாலையை இணைக்க தடையாக உள்ள அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் மற்றும் தலைவர்கள் சிலைகளை மாற்று இடத்தில் வைத்து, கிடப்பில் உள்ள மேம்பால பணியை துவங்க நகாய் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் மேற்கில் வசிக்கும் 25 கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அன்றாட பணிக்காக தினமும் பைபாஸ் சாலையை கடந்து விக்கிரவாண்டிக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. வடக்கு பைபாஸ் சந்திப்பு பகுதியை கடக்க போதிய இடவசதி இல்லாததால், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்தன.இதனை தவிர்க்க பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் நகாய் நிர்வாகம் முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, தென்பசியார் பகுதிகளில் 6 வழி சாலையுடன் மேம்பாலங்கள் கட்ட ரூ.60.78 கோடி நிதி ஒதுக்கியது. இப்பணியை டெண்டர் எடுத்து சென்னை பி.எஸ்.டி., கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனம் முதற்கட்டமாக சாலைகளின் இருபுறமும் சர்வீஸ் சாலையை இருபுறமும் 7.5 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. சர்வீஸ் சாலை மற்றும் ஆங்காங்கே சிறு, குறு பாலம் அமைக்கும் பணி 85 சதவிகிதம் முடிவடைந்துள்ளது.தற்பொழுது வடக்கு பைபாஸில் சாலையின் கிழக்கு புறம் சென்னை -திருச்சி சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை இணைத்து போக்குவரத்தை மாற்றி விட்டால் மேம்பால பணியை துவங்க முடியும்.ஆனால் அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள், கட்சி தலைவர்கள் சிலைகளை அப்புறப்படுத்தாததால் பணி தடைப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கபணிக்கு தடையாக உள்ள கோவில் மற்றும் வீடுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கும் நகாய் அதிகாரிகள், வடக்கு பைபாஸில் உள்ள சிலைகளை அகற்றி மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்காததால் மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், விபத்துகள் தொடர்கிறது.எனவே, நகாய் அதிகாரிகள், மேம்பால பணிக்கு தடையாக உள்ள கட்சி கொடிக்கம்பங்கள் மற்றும் தலைவர்கள் சிலைகளை மாற்று இடத்தில் வைத்து, பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி