பெருந்திட்ட வளாகம் எதிரில் போராட்டம் நடத்த... தடை; கலெக்டர் தலைமையில் அதிரடி தீர்மானம்
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை விதிக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அரசியல் கட்சிகள், அரசு ஊழியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.பெருந்திட்ட வளாகம் எதிரில், ஆளுங்கட்சியான தி.மு.க., எதிர்கட்சியான அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., - காங்., - வி.சி., - தே.மு.தி.க., - பா.ம.க., இந்திய குடியரசு கட்சி மற்றும் கம்யூ., கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளன.இதேபோல், அரசு ஊழியர் சங்கங்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், அந்த இடத்தில் விழுப்புரம் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், கடந்த 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக அ.தி.மு.க., சார்பில், போலீஸ் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது.அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினால், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாதிப்பு, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.இதையடுத்து, அ.தி.மு.க., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, போலீசாரின் கட்டுப்பாடுகளை அ.தி.மு.க.,வினர் கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.இந்நிலையில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பழனி தலைமையில் நடந்த கூட்டத்தில், எஸ்.பி., தீபக் சிவாச், வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி, அனைத்து கட்சிகள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.இதில், பெருந்திட்ட வளாகம் எதிரில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறுவதால், பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள், வியாபாரிகளின் நலன் பாதிக்கப்படுகிறது.எனவே, இனி வரும் நாட்களில், அந்த இடத்தில் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கக் கூடாது. இதற்கு மாற்றாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான திடலில், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்குமாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இதில், பிரச்னைகள் ஏதும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பழனி தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே, இனி எந்த அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கப்பட மாட்டாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.