செஞ்சியில் உடற்பயிற்சி கூடம் பொதுமக்கள் கோரிக்கை
செஞ்சி : செஞ்சி பி.ஏரிக்கரையில் உடற்பயிற்சி கூடம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நவீன உலகத்தில் போதிய உடல் உழைப்பு இல்லாததால், இளைஞர்கள் ஏராளமான நோய்களுடன் அவதிப்படுகின்றனர்.சில நேரம் அகால மரணமும் ஏற்படுகிறது. மத்திய வயதை கடந்த பலரும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் சிகிச்சை முறையில் நடைபயிற்சியும் ஒன்றாக மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். செஞ்சியில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான அரசின் பொது உடற்பயிற்சி கூடம் ஏதும் இல்லை. இதனால் செஞ்சியில் உடற்பயிற்சி செய்வதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. புதர் மண்டி கிடந்த செஞ்சி பி.ஏரியை சீரமைத்து நடைபாதை அமைத்துள்ளனர். இதில் தினமும் ஏராளமான மக்கள் நடை பயிற்சி செய்கின்றனர். இங்கு உடற்பயிற்சி கூடம் அமைக்க இடவசதி உள்ளது. அதனால் உடற்பயிற்சி கூடம் அமைத்தால், இளைஞர்கள் மட்டுமின்றி பொது மக்களும் பயன்பெறுவர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உடற்பயிற்சி கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.