மக்கள் தொடர்பு திட்ட முகாம் நலத்திட்ட உதவி வழங்கல்
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம், தாலுகா காரணை பெரிச்சானுார் ஊராட்சியில், விழுப்புரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். திருக்கோவிலுார் தொகுதி எம்.எல்.ஏ பழனிச்சாமி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பல்வேறு துறைகளை சேர்ந்த, 195 பயனாளிகளுக்கு 26 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியதாவது: மக்கள் தொடர்பு திட்ட முகாமின் முக்கிய நோக்கம் அரசின் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து பயன்பெற வேண்டும் என்பது தான். பொதுமக்கள் வசிப்பிடத்திற்கே சென்று, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பதும் முக்கிய நோக்கம். இன்றைய தினம் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து தகுதியான பயணிகளுக்கு தற்போது அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். இதில் முகையூர் சேர்மன் தனலட்சுமி, சப்–கலெக்டர் காதர் அலி, ஆர்.டி.ஓ ஏகாம்பரம், கண்டாச்சிபுரம் தாசில்தார் சாருமதி, ஊராட்சி குழு உறுப்பினர் விருத்தாம்பாள், காரணை பெரிச்சானுார் ஊராட்சி தலைவர் சத்யா குப்புசாமி, துணைத்தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.