உழவர் சந்தைக்கு அருகில் டாஸ்மாக் வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் புதியதாக திறக்கப்படவுள்ள உழவர் சந்தைக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விக்கிரவாண்டி பேரூராட்சியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா சட்டசபையில் கோரிக்கை வைத்ததின் பேரில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உழவர் சந்தை அமைக்கப்படும் என கூறி அதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கினார்.விக்கிரவாண்டி பஸ் நிலையத்தின் பின்புறம் ரூ.1.5 கோடி மதிப்பில் புதிய உழவர் சந்தை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் அமைச்சர் பொன்முடி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.சந்தை கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. 80 சதவிகித பணிகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த மாதம் உழவர் சந்தையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், உழவர் சந்தை அருகில் டாஸ்மாக் கடை எண் 11545 செயல்படுகிறது. இதனால் அப்பகுதியில் மது பிரியர்கள் அதிக அளவில் சுற்றித்திரிந்து வருகின்றனர்.புதியதாக திறக்க உள்ள உழவர் சந்தையில் காய்கறி விற்கவும், வீட்டிற்கு வாங்கி செல்லவும் பெண்கள் அதிக அளவில் வருவர். அப்போது குடிகாரர்களால் பெண்கள் தொல்லைக்கு ஆளாகும் நிலை ஏற்படும். குடிகாரர்கள் தொல்லை காரணமாக பெண்கள் உழவர் சந்தைக்கு வருவதை தவிர்ப்பர்.எனவே விவசாயிகள் நலனுக்காகவும், பெண்கள் பாதுகாப்பிற்காக, உழவர்சந்தை அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட கலெக்டர், தொகுதி எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.