உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டியலின மக்கள் தர்ணா கோட்டக்குப்பம் அருகே பரபரப்பு

பட்டியலின மக்கள் தர்ணா கோட்டக்குப்பம் அருகே பரபரப்பு

கோட்டக்குப்பம்:தனி நபர் அடைத்து வைத்திருந்த வழியை திறந்து விடக்கோரி பட்டியலின மக்கள் 'திடீர்' தர்ணாவில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டக்குப்பம் அருகே, கீழ் புத்துப்பட்டு ஊராட்சியில் கெங்கை அம்மன் நகர் உள்ளது. இப்பகுதியில் உள்ள, 25 பட்டியலின குடும்பங்களுக்கு கடந்த, 2004ம் ஆண்டு அரசு சார்பில் நத்தம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடுகளின் எதிரில் உள்ள வழியை இ.சி.ஆர்., செல்லும் பொது வழியாகவும் பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே தனி நபர் ஒருவர், அம்மக்கள் பயன்படுத்தி வந்த வழி தனக்கு சொந்தமானது எனக்கூறி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தனி நபருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக தெரிகிறது. அதனால் அந்த நபர், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழியை வேலி போட்டு அடைத்துள்ளார். இதன் காரணமாக அப்பகுதிமக்கள் ஈ.சி.ஆர்., சாலைக்கு வர குறைந்து, 5 கி.மீ., துாரம் சுற்றி கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை, 10:30 மணிக்கு அப்பகுதி சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு, அதே பகுதியில் திடீரென தர்ணா போாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வழியை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் வழியை மறித்து வைத்த நபரை அழைத்து பேசி, தற்காலிகமாக வழியை திறக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து போாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை