உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் பராமரிப்பின்றி வீணாகும் மைதானங்கள்; இடமின்றி வீரர்கள் அவதி

விழுப்புரத்தில் பராமரிப்பின்றி வீணாகும் மைதானங்கள்; இடமின்றி வீரர்கள் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதியில் விளையாட்டு வீரர்கள், விளையாட இடமின்றி தவிக்கும் சூழலில் 2 மைதானங்கள் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசு மூலம் தேர்வான மாணவ, மாணவிகள் தடகளம், வாலிபால், கால்பந்து, கோ கோ உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி பெறுவது மட்டுமின்றி, மாவட்ட அளவிலான போட்டிகளும் நடக்கிறது. ஆனால் தனியார் கிளப் மற்றும் பொதுமக்கள் விளையாட மைதானம் இல்லை. விழுப்புரம் பெருந்திட்ட வளாக உள்விளையாட்டு அரங்கத்தில், சில விளையாட்டு பயிற்சிகள் மட்டுமே பெற முடியும். திறந்தவெளி மைதானம் இருந்தால் தான், கால்பந்து, வாலிபால், கிரிக்கெட், ஹாக்கி, தடகள பயிற்சிகள் செய்ய முடியும். விழுப்புரம் நகர பகுதியில் உள்ள நகராட்சி மைதானம், ரயில்வே காலனி குடியிருப்பு மைதானங்கள் போதிய பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. இந்த மைதானங்களில் கடந்த காலங்களில் வாலிபால், கால்பந்து போட்டிகள் மட்டுமின்றி, அரசியல், பொது நிகழ்ச்சிகள் நடந்தது. தற்போது சரியான பராமரிப்பு இல்லாததால், முட்புதர்கள் வளர்ந்து, விளையாடுவதற்கு லாயகற்ற நிலையில் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற பராமரிப்பு இன்றி வீணாகி வரும் இரு மைதானங்களை சீரமைக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !