வேலை நிறுத்தப் போராட்டம்
விழுப்புரம் :மாவட்டத்தில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நெருக்கடியை போக்கவும், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கினர். விழுப்புரம் மாவட்டத்திலும், அச்சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த போராட்டத்தால், கலெக்டர் அலுவலகம் மற்றும் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட அனைத்து தாலுகா அலுவலகங்களும், 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிக்கு செல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், சான்றிதழ், நலத்திட்ட பதிவுகள் உள்ளிட்ட வருவாய்த்துறை தொடர்பான பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.