உணவு பொருட்களின் விலை உயர்வால் மக்கள்…அவதி! கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை காரணம் காட்டி உயர்த்தப்பட்டுள்ள உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. வர்த்தக சிலிண்ட கிடைக்காததால் பல சிறிய ஓட்டல்கள் மூடப்பட்டன. மேலும், பல ஓட்டல்கள் எரிவாயுவைச் சிக்கனப்படுத்த வழக்கமாக நள்ளிரவு 12:00 மணி வரை திறந்திருந்திரந்த ஓட்டல்கள் இரவு 8:00 மணிக்கே மூடினர். மேலும், மீண்டும் விறகு அடுப்புகளுக்கு சில ஓட்டல்கள் மாறின. இதனால், விறகு விலையும் கனிசமாக உயர்ந்தது. சிலிண்டர் தட்டுப்பாட்டை காரணம் காட்டியும், விறகு விலை உயர்வைக் காரணம் காட்டியும் டீ மற்றும் சிற்றுண்டி விலையை சற்று உயர்த்தி விலைப் பட்டியல் மாற்றியமைத்தனர். இதில், சிற்றுண்டியான இட்டி, பொங்கல், பூரி மற்றும் பிரியாணி, சாப்பாடு, துரித உணவுகளின் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டது. மேலும், அடித்தட்டு மக்கள் அதிகளவில் அருந்தும் டீ, காபி விலையும் உயர்த்தப்பட்டது. காஸ் தட்டுப்பாட்டிற்கு முன் வடை 10 ரூபாய்க்கும், டீ 10 ரூபாய்க்கும், காபி 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து காஸ் தட்டுப்பாடு காரணமாக டீ 12 ரூபாய்க்கும், வடை 12 ரூபாய்க்கும், காபி 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த கட்டமாக வர்த்தக காஸ் சிலிண்டர் 990 ரூபாய் உயர்ந்தது. இந்த விலை உயர்வைக் காரணம் காட்டி தற்போது டீ 15 ரூபாய்க்கும், வடை 15 ரூபாய்க்கும், காபி 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், தினசரி கூலி வேலை செய்பவர்கள் பசிக்காக வடை சாப்பிட்டு டீ, காபி குடிக்கக்கூட யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உணவு பொருட்களின் விலை உயர்வால் தினந்தோறும் ஓட்டல்களில் உணவு வாங்குபவர்கள், டீ, காபி குடிக்கும் அடித்தட்டு மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் காஸ் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைக் காரணம் காட்டி உயர்த்தப்பட்டுள்ள டீ, காபி மற்றும் சிற்றுண்டி உணவு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.