கல்வியில் சிறந்த தமிழகம்: நிகழ்ச்சி ஆய்வு கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஊரக வளரச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், 'கல்வியில் சிறந்த தமிழகம்' என்ற நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது: முதல்வர் தலைமையில் நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கல்வியில் சிறந்த தமிழகம் என்ற நிகழ்ச்சி கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும் மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், அன்றைய தினம் மாலை 4:00 மணி முதல் வண்ணத்திரை மூலம் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க செய்வதற்கான ஏற்பாட்டினை அந்தந்த கல்லுாரி முதல்வர்கள் தயார் செய்ய வேண்டும். மேலும், மாணவர்கள் முன்கூட்டியே இத்தகவலை பெற்றோரிடம் தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும். அன்று மாலை நிகழ்சியை பார்த்துவிட்டு எவ்வித இடையூறும் இல்லாமல் மாணவர்கள் செல்வதற்கு பஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நிகழ்ச்சி நடக்கும் கல்லுாரிகளில் காவல் துறை மூலம் பாதுகாப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ், மண்டல இணை இயக்குநர் மலர் உட்பட பலர் பங்கேற்றனர்.