உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தமிழக வெற்றிக் கழக மாநாடு 90 சதவீத பணிகள் நிறைவு

தமிழக வெற்றிக் கழக மாநாடு 90 சதவீத பணிகள் நிறைவு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளில் ஒப்பந்ததாரர்கள் பம்பரமாக சுழன்று இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.நேற்று மாநாட்டு முகப்பு வாயிலில் இருந்து மாநாட்டு திடல் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் 500 கொடி கம்பங்கள் நட்டு அதில் 15 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட வெல்வெட் துணியிலான கட்சி கொடியை பறக்க விட்டுள்ளனர்.இதேபோன்று, மாநாட்டு திடலில் 900 கொடி கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.மாநாட்டு பணிகளை பார்வையிட வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நுழைவு வாயிலில் உள்ள தனியார் நிறுவன பவுன்சர்கள், உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். போலீசார் மட்டும் அவ்வப்போது மாநாட்டு திடலினுள் சென்று பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையோரம் மாநாடு நடத்த அனுமதியும், சாலை பாதுகாப்பு மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், 'நகாய்' திட்ட இயக்குனர் வரதராஜனிடம் வழங்க கேட்டுக் கொண்டார்.அதன்பேரில், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை டோல்பிளாசா மேலாளர் சதீஷ்குமார், பி.ஆர்.ஓ., தண்டபாணி, பாதுகாப்பு மேலாளர் மனோஜ்குமார் ஆகியோர் நேற்று மாநாட்டு திடலை பார்வையிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை