திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த நகர்மன்ற கூட்டத்திலிருந்த தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் நகர்மன்ற கூட்டம், நேற்று காலை நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல், ஆணையாளர் குமரன், பொறியாளர் சரோஜா, மேலாளர் நெடுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கிய உடன், தி.மு.க., கவுன்சிலர் பாபு, தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் முடிந்து 5 வது ஆண்டு துவங்கியுள்ளதால், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றபட்டது. நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல், தன்னுடைய வார்டில் சாலை போடுவதற்காக ஒதுக்கப்பட்ட பணி, வேறு ஒரு வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் என்னுடைய வார்டில் அந்த பணியை ஒதுக்க வேண்டும் என்று கூறினார். தி.மு.க., கவுன்சிலர் பாபு: 'மாஜி அமைச்சர் சண்முகம் வசிக்கும், மொட்டையர் தெருவில், தற்போது தான் புதியதாக தார் சாலை போடப்பட்டது. அந்த சாலையை உடைத்துவிட்டு, பைப் லைன் புதைக்கும் வேலை நடக்கிறது. இதனால் நகராட்சி பணம் வீணாகின்றது என கூறினார். இதற்கு ஆணையாளர்,'பழுதான சாலையை அதே ஒப்பந்ததாரர் மூலம் சீர் செய்யப்படும் என்று கூறினார்.அ.தி.மு.க., கவுன்சிலர் ஜனார்த்தனன்: தீர்த்தக்குளம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்தும் புதியதாக தார் சாலை அமைக்கவில்லை. 33 வது வார்டில், தனியார் லேஅவுட்டில் உள்ள திறந்து வெளி கிணற்றில் பள்ளி மாணவர் மூழ்கி இறந்துவிட்டதால், அந்த கிணற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், திண்டிவனம் மரக்காணம் ரோட்டில் நகராட்சி சார்பில் அமைக்கப்படும் நவீன எரிவாயு தகன மேடையை விரைவில் திறக்க வேண்டும், மேம்பால ஹைமாஸ் விளக்குள் எரியவில்லை. மாரிசெட்டிக்குளத்தை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும். தி.மு.க., கவுன்சிலர் ரவிச்சந்திரன்: திண்டிவனம்-சென்னை சாலையில், ரூ.25.15 கோடி செலவில், நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகின்றது. இதில் சுமார் 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது. புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெறவில்லை. பஸ் நிலைய ஒப்பந்ததாரரை கேட்டால், நிலுவை பணம் நகராட்சி தரவில்லை. அதனால்தான் வேலை நடைபெற வில்லை என கூறுவதாக தெரிவித்தார். இதற்கு ஆணையாளர், ஒப்பந்தாரரருக்கு 90 சதவீத தொகை வழங்கப்பட்டு விட்டது. தற்போது கூடுதல் பணிக்காக, ரூ.2.45 கோடி கேட்கிறார். இந்தப் பணிக்கான விபரங்கள் கூறாமல் பணம் எப்படி தரமுடியும். இதுவரை நகராட்சி சார்பில் 22.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. பணிகளை முடித்து கொடுத்தால்தான் மீதி பணம் கொடுக்க முடியும் என கூறினார். இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் பாபு, சின்னச்சாமி உள்ளிட்டோர், பணிகளை முடிக்கவில்லை என்றால் ஒப்பந்ததாரை ரத்து செய்யுங்கள் என்று கூறினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு
4வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் லதா சாரங்கபாணி, தன்னுடய வார்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூட பணிகள் நீண்ட நாட்கள் நடைபெறாமல் உள்ளது. பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, மதியம் 12.30 மணிக்கு, வெளிநடபு செய்தார்.