உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் குப்பை கொட்ட நிரந்தர இடம் தேவை: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

திண்டிவனத்தில் குப்பை கொட்ட நிரந்தர இடம் தேவை: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இடம் பற்றாக்குறை காரணமாக சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டி தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.திண்டிவனம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நுண் உரமாக்கும் மையம், சலவாதி சுடுகாடு பகுதி, அவரைப்பாக்கம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் திண்டிவனம் நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளில் இருந்தும், தினமும் சேகரமாகும் குப்பைகைளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு வந்தது.இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், சலவாதி ரோட்டில் உள்ள குப்பை யார்டில் கொட்டப்பட்டு, மொத்தமாக தரம் பிரிக்கப்பட்டு, மக்காத குப்பைகளை வேறு இடங்களுக்கு நகராட்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது குப்பை யார்டு உள்ள பகுதியில் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்காக மைக்ரோ கம்போசிங் மையம் கட்டப்பட்டுள்ளது. இதனால் நகர பகுதிகளில் நகராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு போதுமான இடம் இல்லை. இடம் பற்றாக்குறை காரணமாக, நகராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் யார்டிற்கு கொண்டு போகாமல், திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரை, கர்ணாவூர் சுடுகாட்டு பகுதி, சென்னை சாலையில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்திற்கு அருகே உள்ள ஏரி, சலவாதி சுடுகாடு அருகே உள்ள பகுதி என பல்வேறு இடங்களில் குப்பைகளை மலை போல் கொட்டி தீ வைத்து வருகின்றனர்.இவ்வாறு குப்பைகளைக் கொட்டி தீ வைத்து வருவதால், புகை மூட்டம் ஏற்பட்டு சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்படுகிறது.குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் பல முறை கவுனசிலர்கள் கோரிக்கை வைத்தும், இன்று வரை குப்பைகளுக்கு தீ வைக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இதற்கிடையே கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று, குப்பைகள் கொட்டுவதற்கு புதிய இடம் தேர்வு செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் கூறி பல மாதங்களாகியும் இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை. பொது மக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, நகரப்பகுதியில் சேரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு புதிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும், திண்டிவனத்தில் குப்பைகளைக் கண்ட இடங்களில் கொட்டி தீ வைத்து வரும் நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ