| ADDED : மார் 14, 2025 05:01 AM
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையோரத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிகளில் கட்டப்படும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள்வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கி தரவேண்டும் என்பது அரசு விதி. பெரும்பாலான வணிக நிறுவனங்கள், இந்த சட்டத்தை கடைபிடிப்பதில்லை. இதனால் மிகப்பெரிய கடைகளின் கேட்டில் இங்கு வாகனங்களை நிறுத்தாதீர்கள் என்ற அறிவிப்பு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு கடை முன்பு இதேபோல போர்டு வைத்துவிட்டால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனத்தை எங்கு நிறுத்துவது என்கிற கேள்வி எழுந்துள்ளது.விழுப்புரம் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாதாகோவில் பஸ் நிறுத்தம் வரையில் புதுச்சேரி செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சாலையோரம் இரு புறமும் வரிசையாக மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவை தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால், பஸ், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். இப்பிரச்னையை தீர்க்க, விழுப்புரம் நகரின் முக்கிய இடங்களில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு, நகராட்சி நிர்வாகம் தனியாக இடத்தை ஒதுக்க வேண்டும். மேலும் சாலையோரத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். பொதுமக்கள் சாலையோரம் நடந்து செல்ல முடியாத அளவு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம், தனி கவனம் செலுத்திட வேண்டும்.