ரயில் பயணிகள் மீட்கப்பட்டு பஸ்களில் அனுப்பி வைப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தண்டவாள பகுதியில் வெள்ளம் காரணமாக, நிறுத்தப்பட்ட ரயில்களிலிருந்த பயணிகள் மீட்கப்பட்டு, நேற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.விழுப்புரம் அருகே பம்பை ஆற்று பாலத்தில் வெள்ளநீர் சென்றதால், சென்னை-திருச்சி மார்க்க ரயில்கள் நிறுத்தப்பட்டன. செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் செங்கோட்டை எக்பிரஸ் ரயில், மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் பாண்டியன் சூப்பர் பாஸ்ட் ரயில்கள், நேற்று விழுப்புரம், திருவண்ணாமலை,வேலூர் கண்டோன்மென்ட் வழியாக செல்லும் வகையில் திருப்பிவிடப்பட்டது. ஆனால், மாம்பழப்பட்டு ரயில் நிலையத்தை தாண்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், இரு ரயில்களும் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதுபோல கொல்லத்திலிருந்து சென்னை செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் வெங்கடேசபுரத்தில் நிறுத்தப்பட்டது.இதனால், மாம்பழப்பட்டு ரயில் நிலையத்தில் தவித்த பயணிகள் 1500 பேர் மீட்கப்பட்டு, பஸ்கள் மூலம் சென்னைக்கு அனுப்பினர். வெங்கடேசபுரம் ரயில் நிலையத்தில் தவித்த 600 பயணிகள் அரசு பஸ்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்த 600 பயணிகளும், பஸ்கள் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டனர். பயணிகளுக்கு உணவு பொட்டலமும் ரயில்வே நிர்வாகத்தினர் வழங்கினர்.