உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்படுமா?தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கை தேவை

திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்படுமா?தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கை தேவை

செஞ்சி: புதுச்சேரியில் இருந்து பெங்களூரு செல்லும் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக உள்ள திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில், வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால், இச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை எண்: 77, புதுச்சேரியில் துவங்கி திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை வழியாக கிருஷ்ணகிரி வரை செல்கிறது. மொத்தம், 178 கி.மீ., துாரம் கொண்ட இந்த சாலை, கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலை வழியாக பெங்களூருவுடன் இணைகிறது. வரலாற்று காலம் தொட்டு முக்கிய போக்குவரத்து வழித்தடமாகவும் இச்சாலை இருந்து வருகிறது. ரூ.1,200 கோடி திட்டம் கடந்த, 2011 ம் ஆண்டு இந்த சாலையை ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் நடத்தப்பட்ட வாகன கணக்கெடுப்பில் போக்குவரத்து அளவு குறைவாக இருப்பதாக தெரியவந்ததால், திட்டத்தில் மாற்றம் செய்து ரூ.624.24 கோடி மதிப்பில் இருவழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த, 2012-ம் ஆண்டு துவங்கிய பணிகள் நீண்ட காலத்துக்கு பிறகு, 2024-ம் ஆண்டு நிறைவடைந்தன. 10 மீ., அகலத்தில் இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டதுடன், மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதிகரித்த போக்குவரத்து திட்டம் தொடங்கப்பட்ட, 2012 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, பணிகள் நிறைவடைவதற்கு முன்பாகவே இந்த வழித்தடத்தில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. சாலை தரம் உயர்த்தப்பட்ட பின்னர், புதுச்சேரி-பெங்களூரு இடையே பஸ் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. பெங்களூருவில் பணிபுரியும் ஏராளமானோர் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர். இதனால் கார்கள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், புதுச்சேரியில் இருந்து உற்பத்தியாகும் பல்வேறு நுகர்வு பொருட்கள் இந்த வழியாக பெங்களூரு மற்றும் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் சரக்கு வாகன போக்குவரத்தும் கணிசமாக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலைக்கு அதிகரிக்கும் பக்தர்கள் திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு முன்பு, கார்த்திகை தீபத் திருவிழா காலங்களில் மட்டுமே அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். தற்போது பவுர்ணமி, பிரதோஷம், வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளதால், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரித்துள்ளன. விபத்துகளும் அதிகரிப்பு வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலான சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளில் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்துகளை முறையாக கணக்கெடுத்தால், நான்கு வழிச்சாலையின் அவசியம் தெளிவாக தெரியவரும். எனவே, தற்போதைய வாகன போக்குவரத்து அளவை கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறை புதிய வாகன கணக்கெடுப்பு நடத்தி, திண்டிவனம்-திருவண்ணாமலை இடையிலான தேசிய நெடுஞ்சாலை: 77, ஐ நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்