வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அங்கே ஏதேனும் வருமானம் வருமென்று தெரிந்திருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாங்க
செஞ்சி: தமிழ் எழுத்துக்கள் வளர்ச்சிக்கு வரலாற்று சான்றாக இருக்கும் திருநாதர் குன்று கல்வெட்டுகளை பாதுகாக்க இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் பழமையும், புராதனமும் மிக்க நகரங்களில் ஒன்றாக செஞ்சி கோட்டை உள்ளது. கி.பி., 10ம் நுாற்றாண்டில் துவங்கி, கி.பி.,17 ம் நுாற்றாண்டு வரை தென்னிந்தியாவில் மிக முக்கிய சாம்ராஜ்யமாக செஞ்சி கோட்டை விளங்கியது. கி.பி., 6 மற்றும் கி.பி., 7 ம் நுாற்றாண்டில் செஞ்சி, வந்தவாசி பகுதியில் சமணர்கள் வசித்து வந்தனர். இதற்கு சான்றாக செஞ்சி அடுத்த மேல்சித்தாமூரில் தமிழக சமணர்களின் தலைமையிடமான ஜினகஞ்சி மடமும், பார்சுவநாதர் கோவிலும் இன்றும் உள்ளன. செஞ்சியை சுற்றி உள்ள வரலாற்று சுவடுகள், நினைவு சின்னங்களில் மிக முக்கியமானது திருநாதர் குன்று. செஞ்சி கோட்டைக்கு வடகிழக்கில் 3 கி.மீ. துாரத்தில், இந்த குன்று உள்ளது. குன்றின் உச்சியில் உள்ள பெரிய பாறையில் கிழக்கு திசை நோக்கி இருபத்தி நான்கு சமண தீர்த்தங்கரர்களின் புடைப்பு சிற்பங்களை செதுக்கி உள்ளனர். இன்றும் சமணர்கள் இங்கு வழிபாடு நடத்தி வருகின்றனர். தமிழின் பரிணாம வளர்ச்சி ஆதாரம்
இதே பாறையின் வட திசையில் குன்றின் மீது ஏரி செல்லும் வழியில் உடைந்த நிலையில்அருக தேவர் சிலையும், குன்றின் உச்சியில் சமண துறவிகள் வசித்த குகையும் காணப்படுகின்றன. மேற்கு பக்கம் பாறையில் தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ள கி.பி., 6ம் நுாற்றாண்டை சேர்ந்த இரண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த கல்வெட்டில் சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமண முனிவர் ஐம்பத்தேழு நாள் உண்ணா நோம்பிருந்து உயிர் நீத்ததும், இளையப்பட்டரர் என்ற சமணத்துறவி 30 நாள் உண்ணா நோம்பிருந்து உயிர் நீத்ததும் பதிவு செய்துள்ளனர். தமிழ் எழுத்து ஆராய்ச்சியில் வட்டெழுத்தின் வளர்ச்சியையும், சமண துறவிகளின் தமிழ்ப்பணியும், சமண துறவிகளுக்கு இருக்கை அமைத்து அறப்பணி செய்து வந்ததும் இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.இதன் தொண்மை காரணமாக இந்திய தொல்லியல் துறை இந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்துள்ளது. சமூக விரோதிகளின் கூடாரம்
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கல்வெட்டு இருக்கும் இடத்தை சுற்றிலும் இரும்பு குழாய்களை கொண்டு தடுப்புகள் அமைத்திருந்தனர். சமூக விரோதிகள் குழாய்களை அறுத்து திருடி சென்று விட்டனர். இதன் பிறகு கல்வெட்டை பாதுகாக்க இந்திய தொல்லியல் துறை மாற்று வழிகளை கண்டறிய வில்லை. இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது:பாதுகாப்பு இல்லாமல் உள்ள இந்த கல்வெட்டு குறித்து எந்த அறிவிப்பும் அங்கு இல்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த இடம் மாறி விட்டது. கல்வெட்டின் முக்கியத்துவம் தெரியாத சாதாரண பொது மக்களும், ஆடுமாடு, மேய்ப்பவர்களும் கல்வெட்டு உள்ள பாறை மீது உட்கார்ந்தும், நின்றும் சேதப்படுத்துகின்றனர். இதனால் நாளடைவில் கல்வெட்டுகள் முழுமையாக சேதமடையும் வாய்ப்புள்ளது. அதனால் தமிழ் எழுத்தின் வளர்ச்சிக்கும், சமண சமயத்தின் வரலாற்றிற்கும் முக்கிய இடமாக உள்ள திருநாதர் குன்று கல்வெட்டுக்களை பாதுகாக்க இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருநாதர் குன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து வரலாற்று ஆய்வாளர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் வருகின்றனர். ஆனால் இந்த இடத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாமல் ஏரிக்கரை மீது செல்கின்றனர். மழை நாட்களில் இந்த வழியாக நடந்தும் செல்ல முடிவதில்லை. எனவே இந்த இடத்திற்கு செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.
அங்கே ஏதேனும் வருமானம் வருமென்று தெரிந்திருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாங்க