விழுப்புரம் நகரில் போக்குவரத்து பிரச்னை தீருமா ? : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
விழுப்புரம்: நகரில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு முதல் கிழக்கு பாண்டி சாலை பகுதியில் மாதாகோவில் பஸ் நிறுத்தம் வரையில், தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலை வழியாக தினந்தோறும், 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். விழுப்புரம் நேரு வீதி வழியாக புதுச்சேரி, கடலுார், பண்ருட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுவதால், வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. விழுப்புரம் நகராட்சி எதிர்வரும் காலத்தில் மாநகராட்சியாக வாய்ப்பு உள்ளது. மேலும் நகரில் மேற்கு புறம் புதிய பஸ் நிலையமும், கிழக்கு புறம் மார்க்கெட் மற்றும் 10,க்கும் மேற்பட்ட மேல்நிலை பள்ளிகள், பழைய பஸ்நிலையம், தியேட்டர்கள், மருத்துவமனைகள் உள்ளன. கிழக்கு பாண்டி ரோடு மகாராஜபுரத்தில் இருந்து நான்குமுனை சிக்னல் வரை வாகனங்கள் செல்வதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், விழுப்புரம் நகரைச் சுற்றி பைபாஸ் சாலையை இணைக்கும் வகையில் கூடுதலாக இணைப்பு சாலைகளை ஏற்படுத்தி, போக்குவரத்து பிரச்னையை சீரமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
புதிய பஸ் நிலையத்தை கொண்டு வந்தது தி.மு.க.,
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், போதிய இடமின்றி பஸ்கள் வந்து சென்றன. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், கடந்த 2000 ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் அமைச்சர் பொன்முடி முயற்சியில், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டது. பிரமாண்டமான புதிய பஸ் நிலையத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, போலீசார் மூலம், வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்படுகிறது. முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர், விழுப்புரம் எம்.எல்.ஏ., ஆகியோரின் ஆலோசனை பெற்று, நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க திட்டம் வகுக்கப்படும். - தமிழ்ச்செல்வி பிரபு, நகர் மன்ற சேர்மன்
கோலியனுாரான் வாய்க்கால் பாதையில் புதிய சாலை வசதி
விழுப்புரம் நேரு வீதி, எம்.ஜி., ரோடு, திரு.வி.க., வீதி, காமராஜர் வீதி, மேல்தெரு ஆகிய பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறான நடைபாதை கடைக்காரர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிட வேண்டும். தனியார் பள்ளிகளின் வளாகத்திற்குள் பெற்றோர் வாகனங்கள் வந்து செல்ல இடவசதி செய்யப்பட வேண்டும். விழுப்புரம் நகரில் செல்லும் கோலியனுாரான் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அதனையொட்டி சிறு பாதை ஏற்படுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த வழியாக இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மட்டும் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். - குலாம்மொய்தீன், மாநில காங்., துணைத் தலைவர்.
நகரைச் சுற்றி 'ரிங் ரோடு' தேவை
விழுப்புரம் நகரைச் சுற்றி 'ரிங் ரோடு' அமைப்பதற்கான திட்டம், இதுவரையில், இறுதி வடிவம் பெறவில்லை. நகரின் வடக்கு புறம் உள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காகுப்பம் பகுதிக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும். நகரின் தெற்கு பகுதியில் அரசு பஸ் டெப்போ அருகில் இருந்து மருதுார் ஏரி வழியாக, பானம்பட்டு சாலையுடனம் இணைப்பு சாலை உருவாக்கிட வேண்டும். இதன் மூலம், நகரில் அதிக வாகன நெரிசல் குறைந்து, பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சிரமமின்றி சென்றடையலாம். -வழக்கறிஞர் ராதிகா, அ.தி.மு.க., கவுன்சிலர்
வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதி தேவை
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாதாகோவில் பஸ் நிறுத்தம் வரையில் புதுச்சேரி செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சாலையோரம் இரு புறமும் வரிசையாக பைக், மொபட் ஆகியவை நிறுத்தப்படுகிறது. இப்பிரச்னையை தீர்க்க, விழுப்புரம் நகரின் முக்கிய இடங்களில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு, நகராட்சி நிர்வாகம் தனியாக இடத்தை ஒதுக்க வேண்டும். விழுப்புரம் மேல்தெரு காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில் விராட்டிக்குப்பம் செல்வதற்கான சர்வீஸ் ரோட்டில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த வழியாக கார் மற்றும் ஆட்டோவில் செல்பவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். - பழனிவேல், பா.ம.க., அமைப்பு செயலாளர்
அனைத்து தரப்பு கூட்டத்தில் பிரச்னைக்கு தீர்வு காணலாம்
விழுப்புரம் நகரில் உள்ள பள்ளிகளின் எதிரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, மாற்று ஏற்பாடு தேவை. பள்ளி வளாகத்தினுள் இரு சக்கர வாகனங்களில் சென்று குழந்தைகளை இறக்கி அனுப்ப அனுமதிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் பஸ்கள் விரைவு பஸ்கள் ஜானகிபுரம், கோலியனுார், வளவனுார் வழியாக இயக்கிட வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று திட்டம் குறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பஸ், ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும். அனைத்து தரப்பினரின் ஆலோசனையை பெற்று, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். - வித்யா சங்கரி, வி.சி., கவுன்சிலர்
போக்குவரத்து கடும் பாதிப்பு
விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் இழுபறியால், கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. நகரின் பிரதான சாலையான கே.கே.ரோடு வழியாக புதிய பஸ் நிலையம் செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். பானாம்பட்டு உள்ளிட்ட நகரின் பல குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். இதனால், பிரதான சாலையில் வாகனங்கள் அதிகளவில் செல்வ வேண்டிய நிலை உள்ளது. வாகன நெரிசலை தவிர்க்க மாவட்ட அதிகாரிகள், மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே அகற்றிட வேண்டும். -வடிவேல் பழனி, பா.ஜ., கவுன்சிலர்.