| ADDED : ஏப் 12, 2024 04:16 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்கும் அறை மண் தரையாக உள்ளது. இதில் உறவினர்கள் தங்கி, தகர செட்டின் கூரையின் குழாயில் தொட்டில் அமைத்து குழந்தைகளை துாங்க வைக்கும் நிலையே தொடர்கிறது.விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு அதிக செலவாகும் என்பதால் பல பகுதியில் இருந்தும் வந்து அனுமதிக்கப்பட்டவர்கள் தாய், சேய் நலமுடன் வீடு திரும்புகின்றனர்.மேலும் குறைமாத பிரசவத்தில் எடைகுறைவு, தாய்ப்பால் பற்றாமை ஆகியவற்றிற்கு தனி கவனம் எடுத்து சிகிச்சை அளிக்கப்படுவதால் நாளுக்கு நாள் விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுடன் ஒருவர் மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படுவதால் கர்ப்பிணியின் தந்தை, கணவன், சகோதரர் ஆகியோர் வளாகத்தில் உள்ள நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு அறையில் தங்கி வேண்டியவற்றை வாங்கி கொடுத்து கவனித்து கொள்கின்றனர்.ஆனால் வளாகத்தில் அருகாமையில் உள்ள தகர செட் காத்திருப்பு அறை பல மாதங்களாக மண் தரையாகவே உள்ளது. இந்த மண் தரையில் உறவினர்கள் துண்டு, சமக்காளம் விரித்து துாங்கி வருகின்றனர்.மேலும் தகர செட்டின் கூரையில் உள்ள குழாயில் தொட்டில் அமைத்து கைக்குழந்தைகளுடன் இருப்பவர்கள் துாங்க வைக்கின்றனர். மண்தரையாக இருப்பதால் மழைக்காலத்தில் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே நோயாளிகள் காத்திருக்கும் அறையில் சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.