பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊருக்கு ஒன்றரை கி.மீ., நடை தினமும் அல்லாடும் பூசாரிபட்டி மக்கள்
விருதுநகர்: விருதுநகர் அருகே பூசாரிபட்டியில் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் ஒன்றரை கி.மீ., துாரம் மக்கள் தினமும் நடக்க வேண்டி உள்ளதால் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.விருதுநகர் நான்கு வழிச்சாலையில் இருந்து ஒன்றரை கி.மீ., துாரத்தில் பூசாரிபட்டி கிராமம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கிருந்து ஆர்.ஆர்., நகர், விருதுநகர், சாத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உடலுழைப்பு வேலைக்காக சென்று வருகின்றனர். அதே போல் பூசாரிபட்டியில் துவக்கப்பள்ளி மட்டுமே உள்ளதால் நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு தடங்கம், ஆவடையாபுரம், சின்னையாபுரம், விருதுநகர் பகுதிகளுக்கு மாணவர்களை அனுப்பி வருகின்றனர். 10ம் வகுப்பு பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்புக்காக சென்று விட்டு இரவு வீடு திரும்பும் போது நடந்தே செல்வதால் அச்சத்தோடு ரோட்டில் செல்கின்றனர். தெருவிளக்கு வசதி போதிய அளவில் இருந்தாலும் மக்கள், மாணவர்கள் விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் அச்சமுடனே செல்கின்றனர். நான்கு வழிச்சாலை ஓரம் பஸ் நிறுத்தம் உள்ளது. ஒன்றரை கி.மீ., துாரம் நடப்பதால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். முதியவர்கள், கர்ப்பிணிகள் படாத பாடுபடுகின்றனர். பஸ் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு எளிதாக இருக்கும். போக்குவரத்து கழகம் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.