மருத்துவமனை கட்டுவதாக மோசடி ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்
விருதுநகர்: மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., செய்திக்குறிப்பு:அருப்புக்கோட்டையை சேர்ந்த பானுமதி என்பவரிடம் அருப்புக்கோட்டை தும்முசின்னம்பட்டியை சேர்ந்த டாக்டர் பூர்ணசந்திரன், மனோரஞ்சிதம், கீதா, ஷீபா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மதுரை சிந்தாமணியில் 'சாந்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை' கட்டி வருவதாகவும், அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு 36 சதவீதம் முதல் வட்டி தருவதாகவும், முதலீட்டாளர்களின் குடும்பத்தினருக்கு எல்லா விதமான சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும் என்றும், முதலீட்டாளர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கும் மருத்துவ செலவில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று நம்பும் படி ஆசை வார்த்தைகள் கூறி நம்ப வைத்து மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த நிலையில் பணத்தை திருப்பி தராமல் நம்பிக்கை மோசடி செய்ததால் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு மதுரை, பொருளாதார குற்றப்பிரிவில் அளித்த புகாரில் வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது.விசாரணையில் மதுரை சிந்தாமணி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இயங்கி வந்த சாந்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மேலும் முதலீட்டாளர்கள் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டதாக தெரிய வருவதால், பணத்தை முதலீடு செய்து, பணம் திரும்ப கிடைக்காத மக்கள் யாரேனும் இருப்பின் தக்க ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு சங்கரபாண்டியன் நகர், தபால் தந்தி நகர் விரிவாக்கம், மதுரை என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் அளிக்கலாம், என்றார்.