உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கனிமவள கொள்ளையில் மாயமான 8 லாரிகள் மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்தன

கனிமவள கொள்ளையில் மாயமான 8 லாரிகள் மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்தன

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்தின் அருகே பெரியகுளம் கண்மாயில் ஜன.,28ல் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய 12 லாரிகளில் 4 மட்டுமே ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டன. மற்றவை மாயமாகின.இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானதையடுத்து மாயமான 8 லாரிகளும் ஸ்டேஷன் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இப்பிரச்னையில் வேளாண் உதவி அலுவலர் முத்துகுருவின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இ.குமார லிங்கபுரத்தில் ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகே பெரியகுளம் கண்மாயில் ஜன., 28ல் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட 12 லாரிகளை வச்சக்காரப்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் சாத்துார் வேப்பிலைப்பட்டி சிவரஞ்சினி மீது வழக்கு பதியப்பட்டது.கனிம வளக் கொள்ளையை தடுக்க தவறியதாக சாத்துார் தாசில்தார் ராமநாதன், துணை தாசில்தார் நவநீதன், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, வி.ஏ.ஓ., அஜீதா, கிராம உதவியாளர் குருசாமி உள்ளிட்ட 5 வருவாய் துறையினரும், நீர்வளத்துறை உதவி பொறியாளர், வேளாண் உதவி அலுவலர் முத்துகுரு என 7 பேரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.பறிமுதல் செய்யப்பட்ட 12 லாரிகளில் 4 மட்டுமே ஸ்டேஷன் வளாகத்தில் நின்றன. மீதமுள்ள 8 லாரிகள் மாயமாயின. இதுகுறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மாயமான 8 லாரிகளும் ஸ்டேஷன் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன. வேளாண் உதவி அலுவலர் முத்து குருவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கலெக்டர், வேளாண்மை இணை இயக்குனர் விஜயாவிற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன் படி சஸ்பெண்ட் உத்தரவை இணை இயக்குனர் தயார் செய்து முத்து குருவிடம் வழங்க முயன்ற போது உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தினர் வாங்க மறுத்து உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்னையை சங்கத்தின் மாநில தலைமை நிர்வாகிகள் வேளாண்மை இயக்குனர் முருகேஷ் கவனத்திற்கு கொண்டுச் சென்றனர்.சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேளாண்மை இயக்குனர் விருதுநகர் இணை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து சஸ்பெண்ட் உத்தரவை வேளாண்மை இணை இயக்குனர் விஜயா ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை