விருதுநகர் பங்குனிப் பொங்கல் திருவிழா விடுதிகளில் அதிக கட்டணம் வசூல்; கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
விருதுநகர், : விருதுநகரில் பங்குனிப்பொங்கல் திருவிழா ஏப். 6ல் துவங்கி ஏப். 13ல் வரை நடக்கிறது. இதற்காக வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் விடுதிகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால் வழக்கமான கட்டணத்தை விட சில விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.விருதுநகரில் பங்குனிப்பொங்கல் திருவிழாவிற்கான சாட்டுதல் வைபவம் மார்ச் 16ல் நடந்தது. இதையடுத்து ஏப். 6ல் பங்குனிப் பொங்கல், ஏப். 7ல் கயிறு குத்து, அக்னிச்சட்டி எடுத்தல், ஏப். 8ல் தேராட்டம், ஏப். 10ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டப்பட்டு கொடியிறக்கம் செய்யப்பட்ட பின் ஏப். 13ல் திருவிழா நிறைவடைகிறது.ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் குடும்பத்துடன் விடுதிகளில் அறைகள் எடுத்து தங்கியிருந்து திருவிழா முடிந்தவுடன் செல்கின்றனர். இதனால் விருதுநகரில் உள்ள 20க்கும் மேற்பட்ட விடுதிகளில் முன்பதிவு முழுமையாகி அறைகள் இல்லாத நிலையிலேயே காணப்படும். சில விடுதிகளில் மட்டும் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் பக்தர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இப்படி கட்டண கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. மேலும் வெளியூர் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.