காலதாமதம் இன்றி விபத்து நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியினால் தினமும் பல விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதில் சமீப காலமாக கனரக வாகனங்கள் விபத்துகளை விட டூவீலர் விபத்துக்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இதில் உயிர்ப்பலிகள், உடல் ஊனம், காயம் என்ற பாதிப்புகளுக்கு வாகன ஓட்டிகள் ஆளாகி வருகின்றனர்.கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு வரை அதிகளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வந்த கூலி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், அரசு , தனியார் நிறுவன ஊழியர்கள் ஊரடங்கு தளர்விற்கு பிறகு டூவீலர்கள் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை டூ வீலர் எண்ணிக்கை மாதம் தோறும் அதிகரித்து வருகிறது.இதில் பல கல்லூரி மாணவர்கள் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமலேயே அதிக அளவில் டூவீலர்களை ஓட்டி வருகின்றனர். மாவட்டத்தில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தினசரி குறைந்த பட்சம் ஒரு விபத்தாவது ஏற்பட்டு உயிர் பலி அல்லது பலத்த காயம் என்ற நிலை உள்ளது.இவ்வாறு விபத்து ஏற்பட்டு சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டால், விபத்தில் சிக்கி உயிர் இழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் ரூ 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தமிழக அரசு விக்டிபண்ட் எனப்படும் விபத்து நிவாரண உதவி தொகை வழங்கி வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு மக்களிடம் அதிக அளவில் இல்லை.இருந்தபோதிலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் ஸ்டேஷன் போலீசாரே, அது தொடர்பான ஆவணங்களை தயார் செய்து அந்தந்த தாலுகாவிற்குரிய ஆர்.டி.ஓ.,விற்கு அனுப்பி வருகின்றனர். இவை 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மொத்தமாக நிதிஒதுக்கீடு செய்யப்பட்ட பின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காத்திருக்கும் நிலையில் உள்ளனர்.இதனால் விபத்துகளில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி விடுகின்றனர். அவர்களின் குழந்தைகளும் தொடர்ந்து பள்ளி கல்வி கற்க முடியாமலும், உயர் கல்வி பெற முடியாமலும் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க அதிகபட்சம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை பாதிக்கப்பட்ட வர்கள் குடும்பத்திற்கு அந்த உதவி தொகை கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து தாமதமின்றி வழங்க வேண்டும்.மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள குழந்தைகள் தொடர்ந்து பள்ளி, கல்லூரி செல்கின்றனரா அவர்களின் படிப்பு தொடர்கிறதா என்பதை துறை ரீதியான ஆய்வின் போது கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். தற்போது மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக விசாரித்து காலதாமதம் இன்றி நிவாரணம் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.