பஸ் ஸ்டாண்ட் பாலுாட்டும் அறைகள் பராமரிப்பின்றி பரிதவிப்பு! குழந்தைகளின் பசிபோக்க முடியாது தாய்மார் அவதி
அ.தி.மு.க., ஆட்சியில் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம், காரியாபட்டி பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் தாய்மார், தங்கள் குழந்தைகளின் பசியாற்றுவதற்காக பாலுாட்டும் அறை திறக்கப்பட்டது. இதன் மூலம் பெண்கள் பலரும் குழந்தைகளின் பசியை போக்கி சிரமமின்றி பயணம் செய்தனர்.ஆனால் சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் பஸ் ஸ்டாண்ட்களில் உள்ள தாய்மார்கள் பாலுாட்டும் அறை முறையாக பராமரிக்கப்படவில்லை. கைக்குழந்தைகளின் பசியை போக்க முடியாமல் தாய்மார்கள் அவதிப்படுகின்றனர். இதனால் பெரும்பாலும் பஸ் பயணத்தை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் தற்போதைய நிர்வாகத்தினர் வேண்டும் என்றே பராமரிக்காமல் உள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அருப்புக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.பஸ்கள் வந்து செல்வதற்கு மாற்று வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் பாலுாட்டும் அறைக்கான மாற்று வசதிகளை ஏற்படுத்தவில்லை. இதே நிலை சிவகாசி பஸ் ஸ்டாண்டிலும் உள்ளது. காரியாபட்டியில் தேவை இருந்தும் திறக்கப்படவில்லை.இப்பகுதிகளில் உள்ள பாலுாட்டும் அறைகளில் பணியாளர்கள் பொருட்கள் வைப்பதற்கும், சிலர் சமூக விரோத செயல்களுக்கும், தெருநாய்களின் இருப்பிடமாக மாறிவருகிறது. அதிலும் சில இடங்களில் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.மேலும் ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள பாலுாட்டும் அறை அலுவலர்களின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் போடுவதற்கும், பார்க்கிங் செய்யும் இடமாக செயல்படுகிறது. பஸ் ஸ்டாண்ட்களில் உள்ள குப்பையை அகற்றும் பணியாளர்கள் பாலுாட்டும் அறையை சுத்தம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட்களில் உள்ள தாய்மார்கள் பாலுாட்டும் அறை முழுமையாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.