விடுதிகளை மூடுவதால் வேலையை இழக்கும் துாய்மை பணியாளர்கள்
விருதுநகர்:அரசு பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர்கள் வருகை குறைவதால் மாவட்டத்திற்கு ஒன்றிரண்டு விடுதிகள் மூடப்படுவதால் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் வேலை வாய்ப்பு இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர் விடுதிகள் செயல்படுகின்றன. இவை மூலம் மாணவர்கள் இலவசமாக தங்கி படித்து வருகின்றனர். தற்போது நகரமயமாக்கல், போக்குவரத்து வசதி மேம்பாடு, வாகன பெருக்கம் காரணமாக பெற்றோர் மாணவர்களை விடுதிகளில் விடுவது குறைந்து வருகிறது. மற்றொரு பக்கம் இந்த விடுதிகளில் வார்டன், சமையலர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவே உள்ளதால் மாணவர்கள் ஆர்வம் காட்டாத சூழலும் உள்ளது.இந்த கல்வியாண்டில் மாவட்டத்திற்கு ஒன்று முதல் இரண்டு விடுதிகள் வரை மாணவர்களின் வருகை பதிவு முற்றிலும் இல்லாத காரணத்தால் மூடப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் துாய்மை பணியாளர்கள் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்கள் தொகுப்பூதியம் என்பதால் ஒரு நாள் நிரந்தரமாக்கி காலமுறை ஊதியம் தந்து விடுவர் என்ற நம்பிக்கையில் பலர் பணிபுரிகின்றனர். இந்நிலையில் தற்போது மாவட்டங்கள் தோறும் விடுதிகள் மூடப்பட்டு வருவதால் அவர்களின் பணியிடமும் கேள்விக்குறியாகிறது. மாநில அதிகாரிகள், காலியாக உள்ள வேறு மாவட்டங்களுக்கு வேண்டுமானால் இவர்களை பணியிட மாற்றம் செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.ஆனால் இவர்களை பணியிட மாற்றம் செய்யும் போது குறைந்த பட்ச தொகுப்பூதியம் ரூ.6 ஆயிரத்திற்கு, வெளி மாவட்டங்களில் விலைவாசி உயர்வை வைத்து கொண்டு பணிபுரிய இயலாது என புலம்புகின்றனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.இவர்கள் நீண்ட காலமாக தங்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இவ்வாறு மாற்றம் செய்யும் பட்சத்தில் காலமுறை ஊதியமாவது வழங்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.