உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திறக்கும் முன்பே கட்டடத்தில் விரிசல்

திறக்கும் முன்பே கட்டடத்தில் விரிசல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் 3 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் நிலையில் திறப்பு விழா காணும் முன்பே கட்டடத்தில் விரிசல் கண்டுள்ளதால் தரம் கேள்விக்குறியாக உள்ளது. அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் நகராட்சியின் புதிய பஸ் ஸ்டாண்ட் இயங்கி வருகிறது. கட்டி 30 ஆண்டுகள் ஆன நிலையில் இதை இடித்து விட்டு புதியதாக ரூ.13 கோடியில் கட்டும் பணி நடந்து வருகிறது. பலஆண்டுகளாக பணி மந்தகதியில் நடக்கிறது. நகராட்சி ஏற்படுத்தியுள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டில் போதுமான வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். பணி துவங்கி ஒரு ஆண்டிற்குள் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் கூறிய நிலையில், பணிகள் நடந்து கொண்டே உள்ளது. மாவட்ட கலெக்டர், அமைச்சர் ஆய்வு மேற்கொண்டாலும் ஒப்பந்ததாரர் பணியை முடிப்பதில் அலட்சியம் காட்டுவதால் ஆமை வேகத்தில் பணி நடக்கிறது. இந்நிலையில் திறப்பு விழாவிற்காக பணியை அதிகாரிகள் வேகமாக முடுக்கி விட்டுள்ளனர். கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் பல விரிசல் கண்டுள்ளன. தற்போது இதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. பல கோடிகளை கொட்டி, கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் பல ஆண்டுகள் தரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், திறப்பு விழா செய்வதற்கு முன்பே கட்டட விரிசல் பஸ் ஸ்டாண்ட்டின் தரத்தை கேள்வி குறியாக்கி உள்ளது.மாவட்ட நிர்வாகம் கட்டடத்தை முழுமையாக ஆய்வு செய்துஉறுதியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ