சேதமடைந்து வரும் நாய் பிடிக்கும் வண்டி
அருப்புக்கோட்டை: நவ. 12-: அருப்புக்கோட்டை நகராட்சியில் வாங்கப்பட்ட நாய் பிடிக்கும் வண்டி பயன்பாட்டுக்கு வராமலேயே சேதம் அடைந்த நிலையில் உள்ளது. கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் தெரு நாய்களை பிடிக்க ஒவ்வொரு நகராட்சிக்கும் நாய் பிடிக்கும் வண்டிகள் வழங்கப்பட்டது. இதில், ஒரே சமயத்தில் 6 நாய்களை பிடித்து தனி தனியாக அடைக்க கூண்டு வசதி உள்ளது. நாய்களைப் பிடிப்பதற்கான உபகரணங்கள் வலைகள் கூண்டுகள் உள்ளிட்ட வசதிகளும் உண்டு. அரசு முறையான வழிகாட்டுதல் அறிவுறுத்தல் எதுவும் நகராட்சிகளுக்கு வழங்காததால் தெரு நாய்களை பிடிப்பதில் நகராட்சிகள் திணறி வருகின்றன. அருப்புக்கோட்டை நகராட்சிக்கு நாய் பிடிக்கும் வண்டி ஒன்று 6 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. வண்டியை பயன்படுத்தாததால் மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழையிலும் வெயிலிலும் வண்டி நிற்கிறது. தற்போது வண்டியில் உள்ள அனைத்து டயர்களும் பஞ்சர் ஆகி உள்ளது. மீதமுள்ள உபகரணங்களும் சேத மடைய கூடிய நிலையில் உள்ளன. லட்சக்கணக்கில் செலவழித்து வாங்கப்பட்ட வண்டி பயன்பாடு இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாய் பிடிப்பதற்கு உரிய வழிமுறைகளை அரசு உடனடியாக அறிவித்து நாய் பிடிக்கும் வண்டிகளை பயன்படுத்த நகராட்சிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.