மாவட்ட தலைநகரங்களில் இருந்து சதுரகிரிக்கு நேரடி பஸ்கள் வேண்டும் பக்தர்கள் எதிர்பார்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு நேரடி பஸ்கள் இயக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தின் மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தமிழகம், பாண்டிச்சேரியின் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.குறிப்பாக பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சில ஆயிரம் பக்தர்கள் தொலைதூர வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.இவர்கள் தங்கள் ஊர்களில் இருந்து சதுரகிரிக்கு வருவதற்கு நேரடி பஸ்கள் இல்லாததால் மதுரை வந்து அங்கிருந்து ராஜபாளையம், தென்காசி பஸ்களில் பயணித்து அழகாபுரி, கிருஷ்ணன்கோவிலில் இறங்கி தாணிப்பாறைக்கு செல்கின்றனர்.சுவாமி தரிசனம் செய்த பின்பு மீண்டும் சொந்த ஊர் திரும்ப போதிய பஸ்கள் இல்லாமல் கிருஷ்ணன்கோவில் வந்து நின்று கொண்டே மதுரை செல்கின்றனர். இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்து சதுரகிரிக்கு நேரடி சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.