உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேரை வடக்கு வாசல் முன் நிலைநிறுத்த பக்தர்கள் எதிர்ப்பு

தேரை வடக்கு வாசல் முன் நிலைநிறுத்த பக்தர்கள் எதிர்ப்பு

சிவகாசி: சிவகாசி விஸ்வநாதர் கோயில் தேரோட்டம் நேற்று நடந்த நிலையில், தேரை வடக்கு வாசல் முன் நிலை நிறுத்துவதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மீண்டும் கிழக்கு வாசல் முன் நிலை நிறுத்தப்பட்டது. சிவகாசியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் கோயிலில் 2024 ஏப். ல் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது 100 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த வடக்கு வாசல் திறக்கப்பட்டது. இதனால் வடக்கு வாசல் முன் இருந்த தேர், கிழக்கு வாசல் முன் நிலை நிறுத்தப்பட்டது. தேரை மீண்டும் வடக்கு வாசல் முன் நிலை நிறுத்த அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிராக மண்டகப்படிதாரர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்நிலையில் நேற்று வைகாசி பிரம்மோற்ஸவ விழா தேரோட்டம் நடந்த நிலையில், தேரை மீண்டும் வடக்கு வாசல் முன் நிலை நிறுத்த அறநிலையத்துறை முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் கிழக்கு வாசல் முன் தான் தேரை நிலை நிறுத்த வேண்டும் எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 30 நிமிடங்களுக்கு மேலாக தேர் நிலை நிறுத்தப்படாமல் ரத வீதியிலேயே நின்றது. போலீசார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கிழக்கு வாசல் முன் தேர் நிலை நிறுத்த அனுமதி அளித்ததை அடுத்து, தேர் நிலை நிறுத்தப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு பின் வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், தேரை நிலை நிறுத்தினால் மீண்டும் வடக்கு வாசலை அடைக்கும் சூழல் ஏற்படும். இதனால் கோயில் முன் கிழக்கு வாசலிலேயே நிரந்தரமாக தேரை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ