உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பயன்பாடில்லாத சுகாதார வளாகம், கழிவுநீர் தேங்கும் ஊருணி

பயன்பாடில்லாத சுகாதார வளாகம், கழிவுநீர் தேங்கும் ஊருணி

காரியாபட்டி: ஒரு மாதமாக செயல்படாமல் கிடக்கும் குடிநீர் தொட்டி, பயன்பாடு இன்றி, சேதம் அடைந்து கிடக்கும் சுகாதார வளாகம், கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசும் மந்தை ஊருணி, மேல்புறம் கான்கிரீட் போடாமல் வாறுகாலில் இடறி விழும் சிறுவர்கள் என சிரமத்தில் கே. கரிசல்குளம் குடியிருப்போர் உள்ளனர். காரியாபட்டி கே.கரிசல்குளம் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் திருக்குமாரி, காளீஸ்வரி, முத்துப்பாண்டி, சுப்பிரமணி, அள்ளாச்சி, நாகம்மாள் கூறியதாவது:போதிய தண்ணீர் வசதி இல்லாததால் சுகாதார வளாகம் பயன்படுத்த முடியாமல் போனது. சேதம் அடைந்து அங்குள்ள பொருட்கள் காணாமல் போயின. பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவதால், திறந்தவெளியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மந்தை ஊருணியில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பகலிலே கொசு கடிக்கிறது. அக்கம்பக்கத்தில் குடியிருக்க முடியவில்லை. ஆகாய தாமரைகள் வளர்ந்து ஆபத்தான சூழ்நிலை உள்ளது. கழிவு நீரை வெளியேற்றுவதுடன், மறுபடியும் கழிவுநீர் செல்லாதபடி மாற்று வழியில் வேறு இடத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் குளிக்கும் வகையில், ஊருணியை சுற்றி படிக்கட்டுகள் கட்ட வேண்டும். வாறுகால் கட்டப்பட்டு திறந்த நிலையில் உள்ளது. மேல்புறம் கான்கிரீட் போட்டு மூடாமல் அப்படியே விட்டு விட்டதால் சிறுவர்கள் இடறி விழுகின்றனர். 3 தரைதள தொட்டிகள் சேதமடைந்து ஒரு மாதமாகியும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. தினமும் 2 மணி நேரம் மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பற்றாக்குறையான சப்ளையால் குடிநீரை விலைக்கு வாங்கி வருகிறோம். அதுமட்டுமல்ல உள்ளூர் தண்ணீர் சுவை இன்றி காணப்படுகிறது. தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைந்து கொண்டுவர வேண்டும். கூடுதல் தொட்டி அமைத்து தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாயிலிருந்து 20-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறு அமைத்து இப்பகுதிக்கு சப்ளை செய்யப்படுகிறது. மழை நீரை கண்மாய்க்கு கொண்டு வர வரத்துக்கால்வாயை சீரமைக்க வேண்டும் என்கிற எண்ணம் கிடையாது. மழை நீரை தேக்கினால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் பெருகும். அதற்கான நடவடிக்கை எடுக்காததால் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது., என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ