நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
விருதுநகர் : மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் திறக்க கடந்தாண்டு முதல் நடவடிக்கை எடுத்தும் செயல்பாட்டுக்கு வரவில்லை. மாவட்ட நிர்வாகம் நேரடியாக நடவடிக்கை எடுத்து விரைந்து திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாவட்டத்தில் சில ஆண்டுகளாக தெருக்கள், ரோடுகளில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விளையாடும் குழந்தை கள், நடந்து செல்லும் வயதானவர்கள் என பலர் தினமும் நாய்களால் கடிபடுவது தொடர் கதையாக மாறிவிட்டது. 2024ல் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாய்களால் கடி பட்டுள்ளனர். தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, மூன்று நாட்கள் தொடர்ந்து பராமரித்து, வெளியே விட வேண்டும் என்ற விதி உள்ளது. அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய தயாராக உள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின் நாய்களை தொடர்ந்து பராமரிக்கும் வசதிகள் இல்லை. நாய் பிடிப்பு, ஏ.பி.சி., மையத்தில் சேர்க்கை, பிடிப்பட்ட இடங்களிலிருந்து இடமாற்றம் செய்ய ஒரு நாய்க்கு ரூ. 200, மருந்துகள், உணவு உட்பட அறுவை சிகிச்சைக்கு முந்தைய பராமரிப்பு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்புக்கு ஒரு நாய்க்கு ரூ.1450 மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநில அரசு செயல்படுவதில் சிரமம் ஏற்பட்டதால் தொய்வு நிலை உண்டாகியது. இதை நிவர்த்தி செய்து தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தமிழக அரசு மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் திறக்க நடவடிக்கை எடுத்தது. சிவகாசி மாநாகராட்சியில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் திறக்க கடந்தாண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நடப்பாண்டு மே மாதத்தில் மேயர் சங்கீதா, கமிஷனர் சரவணன் தலைமையில் மீன் மார்கெட் பகுதியில் உள்ள தெருநாய்கள் கருத்தடை சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தனர். ஆனால் இந்த மையத்தை தற்போது வரை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மாவட்டத்தில் நாய்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சிவகாசியில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தை உடனடியாக திறக்க அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மக்களின் நலன் காக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.