உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தோண்டப்பட்ட சாலைகள் பணி முடிந்தும் செப்பனிடாததால் பாதிப்பு

தோண்டப்பட்ட சாலைகள் பணி முடிந்தும் செப்பனிடாததால் பாதிப்பு

ராஜபாளையம், : மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள், பணிகள் முடிந்தும் புதிதாக போடாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குடியிருப்பு பகுதிகளில் ரோடுகளில் குடிநீர் குழாய், டெலிபோன் கேபிள், வலை தள கேபிள்கள், பாதாள சாக்கடை தனியார் சேவைகளுக்கான கேபிள்கள் பதிப்பதற்காககாக தோண்டுவது வழக்கம். இவைகளுக்கான பணிகள் தொடங்கும் முன்பே உள்ளாட்சி நிர்வாகங்களில் முறையான அனுமதி பெற்று அதற்கான கட்டண தொகை செலுத்தி பணிகளை மேற்கொள்கின்றனர்.இத்தொகையில் பணிகள் முடிந்து பழையபடி செப்பனிடுவதற்கான தொகையும் சேர்த்து வசூலிக்கப்படும். ஆனால் நடைமுறையில் சாலையை தோண்டிய பின் பழைய படி செப்பனிடுவதில்லை. தோண்டிய ரோடுகளில் பெயருக்கு மண்ணை மட்டும் நிரப்பி விட்டு செல்கின்றனர். நாளடைவில் வாகனங்களின் அழுத்தம் காரணமாக அப்பகுதி மட்டும் குண்டும், குழியுடன் வேகத்தடைகளாக உருவாகிறது.ராஜபாளையத்தில் தற்போது தாமிரபரணி, பாதாள சாக்கடை பணிகளால் ரோடு முழுமையாக பெயர்த்து எடுக்கப்பட்டு மீண்டும் அமைப்பதற்காக மூன்று முறை சுமார் ரூ. 30 கோடியில் நிதி ஒதுக்கி சாலை பணிகள் நிறைவடைந்து வருகிறது. இதனால் இன்னல்களுக்கு பின் புதிய சாலைகளில் மக்கள் பயணித்து வருகின்றனர்.இந்நிலையில் விடுபட்ட குடியிருப்புகளுக்கு குழாய் இணைப்பு, கசிவுகளை கண்டறிய மீண்டும் தோண்டுதல், கேபிள் இணைப்பு பணிகள், தெருவில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு இணைப்பு என பல்வேறு காரணங்களுக்காக ரோடுகளை சேதப்படுத்துவது நடந்து வருகிறது.தோண்டப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே இருந்தபடி சரி செய்யாமல் விட்டுள்ளதால் இரண்டு ஆண்டுக்குள் போடப்பட்டுள்ள சாலை முழு பயன்பாட்டிற்கு வரும் முன்பே ஆங்காங்கு மேடு பள்ளங்களாகவும், ஜல்லி கற்களுடன் காணப்படுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.மாவட்ட நிர்வாகம் புதிய சாலைகளை தோண்டப்பட்டு செப்பனிடாமல் விடும் செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்