உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிருதுமால் நதிக்கு நிரந்தர ஆயக்கட்டுக்காக போராடும் விவசாயிகள்; விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் திண்டாட்டம்

கிருதுமால் நதிக்கு நிரந்தர ஆயக்கட்டுக்காக போராடும் விவசாயிகள்; விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் திண்டாட்டம்

நரிக்குடி : 50 ஆண்டுகளாக கிருதுமால் நதிக்கு நிரந்தர ஆயக்கட்டு வேண்டி நரிக்குடி பகுதி விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.நரிக்குடி மிகவும் பின்தங்கிய பகுதி. விவசாயம் ஒன்றே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரமாக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர கிருதுமால் நதி ஏற்படுத்தப்பட் டது. இதன் மூலம் பல்வேறு கண்மாய்கள் நிறைந்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசன வசதி பெற்றது. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் முழு நேர தொழிலாக செய்து வருகின்றனர். நாளடைவில் மழை பொழிவு குறைவு, கிருதுமால் நதி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் வரத்து குறைந்தது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து விளைநிலங்கள் தரிசு நிலங்களாக கிடக்கின்றன. இது ஒரு புறம் இருக்க, வைகை ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை திறந்து விடுவதற்கு பல்வேறு போராட்டங்கள் நடத்த வேண்டி இருக்கிறது.இதற்கு முக்கிய காரணம், வைகை ஆற்றில் வரும் தண்ணீர் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு நிரந்தர ஆயக்கட்டு உள்ளது. அப்பகுதிக்கு பகிர்ந்து அளித்த பின் மீதம் இருக்கும் தண்ணீர் தான் கிருதுமால் நதியில் திறந்து விடப்படுகிறது.விவசாயிகள் கேட்டால் ஆயக்கட்டு கிடையாது, ஆகவே மீதமிருந்தால் தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.வைகை ஆற்றில் செல்லும் தண்ணீர் வீணாக கடலில் கலக்க விடுவார்களே தவிர, கிருது மால் நதியில் திறந்து விடுவதற்கு அதிகாரிகளுக்கு ஏனோ மனம் வருவதில்லை. அதிக அளவில் நீர் வரத்து இருந்தாலும் கடும் போராட்டத்திற்கு பின் தண்ணீர் பெற வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. கிருதுமால் நதியில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டியும், பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட மதகு அணை உடைந்து காணப்படுகின்றன.இதனால் ஒவ்வொரு கண்மாய்க்கும் செல்ல வேண்டிய தண்ணீர் வீணாகி வெளியேறுகிறது. மதகு அணையை சீரமைத்து சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, நிரந்தர ஆயக்கட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 50 ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் போராடி வருகின்றனர். மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கும் நரிக்குடி பகுதியை காப்பாற்ற வேண்டுமானால் கிருதுமால் நதியை தூர்வாரி, மதகுகளை சீரமைத்து, நிரந்தர ஆயக்கட்டுக்கு வழிவகை செய்ய வேண்டும் என நரிக்குடி பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை