மக்காச்சோள சாகுபடி திட்டம்
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மக்காச்சோள சாகுபடிக்காக சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் மாவட்டத்திற்கு 5500 எக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சிறுதானிய சாகுபடியில் முக்கிய பயிராக மக்காச்சோளமே முதலிடத்தில் உள்ளது. முக்கிய திட்டமான இதில் விதைகள் அங்கக, உயிர் உரங்கள் வழங்கப்பட்டு செயல் விளக்கத்திடல்கள் அமைத்து அனைத்து தொழில்நுட்பங்களை பின்பற்றி அதிக மகசூல் பெற திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நெற்பயிருக்கான எஸ்.ஆர்.ஐ., இயந்திர நடவுக்காக எக்டேருக்கு ரூ.6 ஆயிரம் மானியம், பருத்தி விதைகள் கிலோவிற்கு ரூ.140 மானியம், பருத்தியில் நுனிக்கிள்ளுதல் எக்டேருக்கு ரூ.1250 மானியம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி அரசு மானியங்களை பெறலாம், என்றார்.