மாசில்லா சிவகாசி: அன்று கழிவு நீர் குட்டை; இன்று மழைநீர் தெப்பம் சிவகாசி முகநுால் நண்பர்கள் குழுவின் சாதனை
சிவகாசி பசுமையைப் பேண மரக்கன்றுகள் நட வேண்டும். மரங்கள் தான் மனித சமுதாயத்திற்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. மரங்கள் நமக்கு நிழல் அளிப்பதுடன், இதமான காற்றையும் அளிக்கிறது. மரங்களால், மனிதருக்கு பல்வேறு பயன்கள் கிடைத்து வருகின்றன. இயற்கையின் கொடை போன்று ரோட்டின் இரு புறமும் வளர்ந்து நிற்கும் மரங்களால், வெயிலின் தாக்கத்திலிருந்தும் தப்பிக்க முடியும். மரங்கள் தான் மனிதர்களின் நுரையீரல். நம்மை நாம் காத்து கொள்ள வேண்டுமென்றால், மரங்களை காப்பது அவசியம். மரங்கள் வெளிவிடும் காற்றை, நாம் சுவாசிக்கிறோம். நாம் வெளிவிடும் காற்றை, மரங்கள் சுவாசிக்கின்றன. அந்த வகையில் கந்தக பூமியான சிவகாசியை மாசிலா நகராகவும் பசுமையாகவும் மாற்றுவதற்காக சிவகாசி முகநுால் நண்பர்கள் குழுவினர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முக்கியமானது, கழிவுநீர் குட்டையாக இருந்த பன்னீர் தெப்பத்தை பெயருக்கு ஏற்றார்போல மழைநீர் தேங்கும் வகையில் பன்னீர் தெப்பம் ஆகவே மாற்றி சாதனை படைத்துள்ளனர். இந்த பன்னீர்தெப்பம் 20 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் கழிவு நீர் தேங்கும் குட்டையாக இருந்தது. இதனைக் கண்ட சிவகாசி முகநுால் நண்பர்கள் குழுவினர் அதனை சீரமைப்பு பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்தனர். தொடர்ந்து 2021 ல் தெப்பத்தை துார்வாரினர். தெப்பத்திற்கு பசுமை போர்த்தும் முயற்சியாக 2022ல் மரக்கன்றுகளும் அழகுச்செடிகளும் பூச்செடிகளும் வைக்கப்பட்டன. நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, இன்று நிழல் குடையாக கிளைகளை விரித்து நிற்கிறது. இங்கு மக்கள் அமரும் வகை இருக்கைகள், நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் ஆதாரமாக பயன்படுகிறது 2021 அக். ல் மழை பெய்து, பன்னீர் தெப்பத்திற்குள் முதல் நீர் உள்ளே வந்தது. தற்போது வரையிலும் நீர் வற்றாமல் இருந்து வருகிறது. முழுக் கொள்ளளவை இரு முறை எட்டியுள்ளது. எவ்வித கழிவுநீரும் உள்ளே சேராத வகையில் இதனை ஒரு மிகப்பெரிய மழை நீர் சேகரிப்பாகவே வடிவமைத்துள்ளோம். தற்போது குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது. வீர அசோக், தலைவர் முகநுால் நண்பர்கள் குழு, சிவகாசி. மக்கள் வரவேற்பு பன்னீர் தெப்பம் உருவானது மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. பன்னீர் தெப்பம் பராமரிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், இந்த வரலாறு படைக்க உறுதுணையாக நிற்கும் நன்கொடையாளர்கள் பெயர்கள் தாங்கிய கல்வெட்டு அமைக்கவும் சிவகாசி மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளோம். சண்முக ரத்தினம் நிறுவனர், முகநுால் நண்பர்கள் குழு, சிவகாசி.