| ADDED : ஜன 05, 2024 05:26 AM
விருதுநகர், : மாவட்டத்தில் நீர் வரத்து ஓடைகளை கட்டட ஆக்கிரமிப்புகள், கோரைப்புற்கள், கருவேல ஆக்கிரமிப்புகள், மண்ணை போட்டு மெத்தி ஓடையை காணாமல் ஆக்குவது போன்ற செயல்களால் பாசனத்திற்கும், நிலத்தடி நீருக்கும் வழியில்லாத சூழல் உள்ளது. ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். அகற்றாததால் 2023 கனமழையில் பல குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் 230 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் 712 கண்மாய்கள், 8 அணைகள் ஆகியவற்றிற்கு நீர்வழித்தடங்கள் அதிகளவில் உள்ளன. 2023 டிச. 18ல் பெய்த கனமழையால் அதிகளவில் அணைகள் அதிகளவில் நீர் நிரம்பி உள்ளன. 60 சதவீத கண்மாய்களும் நிரம்பி விட்டன. ஆனால் இவற்றின் மடைகள், ஷட்டர்கள் பழுது பார்க்கப்படாததால் தொடர்ந்து வீணாக வெளியேறுவது வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் தெற்கு மாவட்டங்களிலும், சென்னையிலும் பெய்த கனமழை வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பவை வரத்து ஓடைகளும், மழைநீர் வடிகால்களும் முறையாக பராமரிக்கப்படாதது தான். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரையில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பவை நீர்வரத்து ஓடைகள் தான். அந்த ஓடைகளின் மீதுள்ள ஆக்கிரமிப்புகளால் தான் நீர் செல்ல வழியின்றி குடியிருப்புக்குள் தேங்கியது. நீர் வழிப்பாதைகள் அனைத்தும் புதர்மண்டி கோரைப்புற்கள் சூழந்து தேவையற்ற இடங்களில் நீர்பிடிப்பு ஏற்படுத்துகிறது. ஆனால் நிலத்தடிநீர் தேவைப்படும், விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நீர் பிடிப்பு ஏற்படுவதில்லை. கண்மாய்களின் நீர்வரத்து ஓடைகளை தனி நபர்கள் கட்டடங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். சிலர் கடைகள், ஆலைகளின் பாதை தேவைக்காக இந்த ஓடைகளை மண் போட்டு மெத்தி மாயமாக்கி உள்ளனர். இது போன்ற பிரச்னைகளில் ஊராட்சி நிர்வாகங்கள், சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் இணைந்து தீர்வு காண வேண்டும். ஆகவே மாவட்ட அளவில் இதற்கென தனி குழு அமைத்து நீர்வரத்து ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளின் தன்மைக்கேற்ப நடவடிக்கை எடுத்து கருவேலம் என்றால் அதை அகற்றவும், கட்டட ஆக்கிரமிப்புகள் என்றால் வருவாய்த்துறையினருடன் இணைந்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மழைக்குள் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.