உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆதரவற்ற பெண்களின் வாரிசுகளுக்கு ஓ.பி.சி., சான்று பெற அலைக்கழிப்பு

ஆதரவற்ற பெண்களின் வாரிசுகளுக்கு ஓ.பி.சி., சான்று பெற அலைக்கழிப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்களின் பிளஸ் 2 முடித்த வாரிசுகளுக்கு ஓ.பி.சி., சான்று பெற அலைக்கழிப்பதால் கவுன்சிலிங் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.மாவட்டத்தில் ஆதரவற்ற விதவை அல்லது கணவனை பிரிந்து வாழும் பெண்கள் தனியே ரேஷன் கார்டு வாங்காத அல்லது வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டோரின் வாரிசுகளுக்கு ஓ.பி.சி., சான்று தாமதம் ஆகிறது.கணவனால் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முறிவுற்று அல்லது தனியாக வசிக்கும் பெண்களில் நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாதோருக்கும் அரசு வழிகாட்டுதலின் படி ரேஷனில் பொருட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆதரவற்ற பெண்கள் ரேஷன் கார்டு வாங்குவதும், பொருட்கள் வாங்குவதும் குதிரை கொம்பாக உள்ளது. இந்நிலையில் ஓ.பி.சி., சான்று பெற ரேஷன் ஸ்மார்ட் கார்டையே முக்கிய ஆதாரமாக வருவாய்த்துறையினர் கேட்பதால் அவர்களின் வாரிசுகளுக்கு கவுன்சிலிங் விண்ணப்பிக்க கடும் சிரமம் ஏற்படுகிறது. ஒரு நபர் தனி நபராக வசித்து வருவதாக தெரிவித்து அவரது ஆதார் விவரத்துடன் இணையதளத்தில் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து, அவர் தனி நபராக வசித்து தனியே சமையல் செய்து எந்த குடும்பத்தையும் சாராது வாழும் நிலை தணிக்கையில் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும்.அவ்வாறு செய்தால் ஓ.பி.சி., சான்று பெறுவது எளிதாகும் அல்லது மாவட்ட நிர்வாகம் இது போன்ற பிளஸ் 2 ரிசல்ட் வெளியான காலங்களில் ஒற்றை பெற்றோர் குழந்தைகளுக்கு ரேஷன் கார்டை விடுத்து 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வழங்க முன்வர வேண்டும். மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி