நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
சேத்துார்: சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சேத்துார் அடுத்த தேவதானம், கோவிலுார் சுற்றுப்பகுதியில் சாஸ்தா கோயில் நீர் தேக்கத்தை ஆதாரமாக வைத்து 10க்கும் மேற்பட்ட கண்மாய் ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில் அறுவடை பணிகள் தொடங்கியதால் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கோவிலுார் தேவதானம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நேற்று தொடங்கியது. மண்டல அதிகாரி சென்னை உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் முன்னிலை வகித்தனர். இதில் 40 கிலோ எடை கொண்ட 3200 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப் படுவதுடன் நெல் வரத்துக்கு ஏற்ப கால நீடிப்பு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.