வாறுகால், ரோடு வசதி இல்லை, குடிநீர் பற்றாக்குறை சிரமத்தில் எஸ்.கல்லுப்பட்டி ஊராட்சி மக்கள்
காரியாபட்டி: வாறுகால் வசதி, கட்டடங்கள் பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது, திறந்த வெளியில் மருத்துவம் பார்க்கும் செவிலியருக்கு கட்டட வசதி இல்லாதது, குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுவது என காரியாபட்டி எஸ். கல்லுப்பட்டி ஊராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர். எஸ்.கல்லுப்பட்டி ஊராட்சியில் சின்ன கல்லுப்பட்டி, அரியனேந்தல் உள்ளன. பெரிய கல்லுப்பட்டியில் வாறுகால் வசதி இல்லாததால் வீதியில் தேங்கி, ஆட்கள் நடந்து செல்ல முடியவில்லை. அரசு கட்டடங்கள் பயன்பாடின்றி சேதமடைந்து வருகிறது. சுகாதார வளாகம் பயன்படுத்தாமல் பாழடைந்து கிடக்கிறது. செவிலியர் மருத்துவம் பார்க்க கட்டட வசதி கிடையாது. எஸ். வெள்ளாகுளம் செல்லும் ரோடு 2 கி.மீ., தூரத்திற்கு மண் ரோடாக இருப்பதால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. சின்ன கல்லுப்பட்டியில் சுகாதார வளாகம் சேதமடைந்து கிடக்கிறது. மக்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். வீதிகளில் சிமென்ட் பெயர்ந்து படுமோசமாக உள்ளதால், இடறி விழுகின்றனர். அரியனேந்தலில் அடிப்படை வசதிகள் முற்றிலும் கிடையாது. குடிநீர் பற்றாக்குறையால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறை லதா, குடும்பத் தலைவி: அரியனேந்தலில் தாமிரபரணி தண்ணீர் எப்போது திறந்து விடுவார்கள் என தெரியாது. இரவு நேரத்தில் திடீரென வரும். குடும்பத்திற்கு 2, 3 குடங்கள் மட்டுமே நிரப்ப முடியும். இது போதுமானதாக இல்லை. பற்றாக்குறையாக உள்ளது. கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும். கழிவுநீர் தேங்குகிறது ஜெகதீஸ், தனியார் ஊழியர்: பெரிய கல்லுப்பட்டியில் வாறுகால் வசதி இல்லாததால் வீதியில் கழிவு நீர் தேங்குகிறது. ஆட்கள் நடந்து செல்ல முடியவில்லை. வாகனங்கள் செல்லும் போது கழிவு நீர் தெறித்து ரோட்டோரமுள்ள வீடுகள் அசுத்தமாகிறது. வாறுகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். விளையாட்டு மைதானம் தேவை மருதுபாண்டி, தனியார் ஊழியர்: விளையாட மைதானம் இல்லாததால் காட்டுப் பகுதியில் விளையாட வேண்டி இருக்கிறது. இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும். அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் செடிகள் முளைத்து புதர் மண்டி கிடப்பதால் மாணவர்கள் விளையாடுவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். தூய்மைப்படுத்தி விளையாட்டு கற்றுத்தர வேண்டும். சேதமான ரோடு மாரி, விவசாயி: சின்ன கல்லுப்பட்டியில் பெரும்பாலான வீதிகள் சிமென்ட் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. ஆட்கள் நடந்து செல்லும் போது இடறி விழுகின்றனர். டூவீலரில் செல்ல முடியவில்லை. சீரமைக்க வேண்டும். வெள்ளாகுளம் ரோடு 2.கி.மீ., தூரத்திற்கு தார் ரோடு போட்டால் கள்ளிக்குடி, திருமங்கலத்திற்கு எளிதில் செல்ல முடியும். பாழடைந்து கிடக்கும் கட்டடங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வசதிகள் இல்லை சுந்தரி அம்மாள், குடும்பத் தலைவி: அரியனேந்தலில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. சேறும் சகதியுமாக மழை நேரங்களில் குடியிருக்க முடியவில்லை. விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. போதிய தெருவிளக்குகள் கிடையாது. அடிகுழாய் பழுதடைந்து உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் ஊரை காலி செய்து வருகின்றனர். இதே நிலைமை நீடித்தால் சில மாதங்களில் முற்றிலும் ஊரை காலி செய்யும் நிலைமை உள்ளது.