சிரமத்தில் சொக்கநாதன் புத்துார் ஊராட்சி மக்கள்
சேத்துார்: பாலம் அமைத்தும் இணைப்பு சாலை முழுமை அடையாததால் பள்ளிக்கும் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கும் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. குடிநீர் குழாய் பதித்தும் ரோடு செப்பனிடாததால் வாகனங்கள் சென்று பழுதாகும் குழாய்களால் மக்கள் சொக்கநாதன்புத்துார் ஊராட்சி மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சொக்கநாதன் புத்துார் ஊராட்சி தென்காசி மாவட்டத்தை ஒட்டி தனி ஊராட்சியாக அமைந்துள்ளது. இப்பகுதியில் பிள்ளையார் கோயில் முன்பு உள்ள நிழற் குடை பயன்பாடு இன்றி திறந்தவெளி பாராக உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியவில்லை. வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மழை, வெயிலுக்கு திறந்த வெளியில் நிற்கின்றனர். வடகாசி அம்மன் கோயில் எதிரே உள்ள ஊருணி பராமரிப்பு இன்றி குப்பை கிடங்காக மாறிவிட்டது. ஊராட்சி அலுவலகம் அருகே திறந்த வெளி கிணறு பாதுகாப்பின்றி உள்ளது. மெயின் ரோட்டை தவிர தெருக்களில் முறையான ரோடு வசதி இல்லை. குண்டும் குழியுமாக காணப்படுவதால் மழை நேரங்களில் சேரும் சகதியுமாக நடமாட முடியவில்லை. காமராஜர் புரத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி காட்சி பொருளாக மாறி உள்ளது. ஆண்களுக்கான பொது சுகாதார வளாக தேவை உள்ளதுடன் இடவசதி இருப்பதால் அமைக்க எதிர்பார்க்கின்றனர். இப்பகுதி குடியிருப்பு நடுவே செல்லும் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பை கொட்டுகின்றனர். துர்நாற்றம் வீசுவதுடன் ஓடை துார் வராமல் உள்ளது. வீர சின்னம்மாள் கோயில் அருகே சிறு பாலம் அமைத்தும் இணைப்பு சாலை முழுமை அடையாததால் இப்பகுதியில் உள்ள பள்ளிக்கும் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கும் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. குடிநீர் குழாய் பதித்தும் ரோடு செப்பனிடாததால் வாகனங்கள் சென்று குழாய்கள் பழுதடைகின்றன. இதனால் குடிநீர் சப்ளைக்கு இடைவெளி அதிகரிக்கிறது.