பிரச்னையும் தீர்வும்
சிவகாசி: பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தரைத்தளம் சேதம், சேதமான பயணிகள் இருக்கைகள், பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகங்கள் என சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எண்ணற்ற பிரச்னைகளால் தள்ளாடுகிறது.சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 300க்கும் மேற்பட்ட முறை அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. உள்ளூர், வெளியூர் பயணிகள் என பரபரப்பாக காணப்படும் பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் சேதத்தால் பயணிகள் அவதிப்படுகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1.94 கோடியில் பஸ் ஸ்டாண்டில் விரிவாக்கப் பணிகள் நடந்தது. இதில் வணிக வளாகங்கள், பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம், பொருட்கள் பாதுகாப்பு அறை கட்டுதல், பஸ் ஸ்டாண்ட் தளங்களை சீரமைத்தல் என பல்வேறு பணிகள் நடந்தது. ஆனால் தற்போது வரையிலும் ஒரு சில வணிக வளாகங்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும் பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம், பொருட்கள் பாதுகாப்பு அறை தற்போது வரையிலும் பூட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2022ல் ரூ.6.11 கோடி நகராட்சி நூற்றாண்டு விழா சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு பஸ் ஸ்டாண்டில் புதிய வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றது. விரைவில் இப்பணிகளை முடித்து அனைத்து வணிக வளாகங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பஸ் ஸ்டாண்டைச் சுற்றிலும் உள்ள வாறுகால் துார்வாரப்படாததால் கழிவு நீர் தேங்கியுள்ளது. பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்துமிடம், தரை தளம் ஆங்காங்கே சேதமடைந்துஉள்ளது. சிவ செல்வராஜ், சமூக ஆர்வலர்: பஸ் ஸ்டாண்டில்பஸ் நிறுத்தப்படும் பெரும்பான்மையான இடங்கள் தாழ்வாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி விடுகின்றது. வளாகத்திலும் சேதமடைந்த பகுதிகளில் மழை நீர் தேங்கி விடுவதால் பஸ் ஏற செல்கின்ற பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பஸ்ஸை விட்டு இறங்கும் போது தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சீரமைக்க வேண்டும்.முனீஸ் குமார், தொழிலதிபர்: பஸ் ஸ்டாண்டில் நுழையும் இடம் அருகே உள்ள சிக்னல்கள் செயல்படவில்லை. போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் சிக்னல்கள் செயல்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது. விபத்திற்கும் வழி வகுக்கிறது. தவிர பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் பஸ்கள் வெளியேறிச் செல்வதற்கு சிரமம் ஏற்படுகின்றது. தவிர பஸ்ஸ்டாண்டிற்குள்ளும் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டைச் சுற்றிலும் உள்ள வாறுகாலை துார்வாரி கழிவுநீர் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்வு: பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பயன்பாட்டில் இல்லாத வணிக வளாகங்களையும், தற்போது கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதால் மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். பஸ் ஸ்டாண்ட் வளாகம்முழுவதுமே முழுமையாக சீரமைக்க வேண்டும். மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பயணிகள் சிரமமின்றி காத்திருப்பர்.