நீளம் குறைவான நடைமேடைகள், நிழற்குடையின்றி மழையில் தவிப்பு * சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் ஸ்ரீவில்லிபுத்துார்: சென்னை செல்லும் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிற்கும் இடத்தில் நிழற்குடை இல்லாததால் மழைநேரத்தில் மக்கள் தவிப்பு, இரண்டாவது நடைமேடையில் பொதிகை எக்ஸ்பிரஸ் செல்ல அனுமதிப்பதால் முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள் சிரமம், நீளம் குறைவான நடைமேடையால் முதியவர்கள் , மாற்றுதிறனாளிகள் பாதிப்பு உட்பட பல்வேறு பிரச்சனைகளால் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷன் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் மயிலாடுதுறை, மதுரை, சென்னை, கொல்லம், குருவாயூர் நகரங்களுக்கு ரயில்கள் இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகின்றனர். இவர்களின் நலன் கருதி 2020ல் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைமேடை உயர்த்துதல், லிப்ட் அமைத்தல், நடை மேம்பாலம், சுகாதார வளாகம், வெயிட்டிங் ஹால், நவீன டார்மெட்ரி அறைகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் முதல் மற்றும் இரண்டாம் நடை மேடைகளில் சென்னை செல்லும் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிற்கும் இடத்தில் நிழற்குடை இல்லாததால் மழை பெய்யும் நேரங்களில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரண்டாவது நடைமேடையில் பொதிகை எக்ஸ்பிரஸ், மதுரை ரயில்கள் பயணிப்பதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பேட்டரி கார் வசதி இல்லாமல் தவிக்கின்றனர். வாரம் இருமுறை இயங்கும் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயிலும், சில சிறப்பு ரயில்களும் ஸ்ரீவில்லிபுத்துார் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படாததால், ரயில் இருந்தும் பயணிக்க முடியாமல் உள்ளூர் பயணிகள் தவித்து வருகின்றனர். ரயில்வே கேட் நடைமேடைகளின் நீளம் குறைவாக இருப்பதால் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் மாற்றுத்திறனாளி பெட்டிகள் நடைமேடையை கடந்து நிற்பதால் அவர்கள் ஏறி, இறங்குவதற்கு சிரமப்படுகின்றனர். நீதிமன்றம் வழியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் ரோடு குறுகலாக இருப்பதால் கார், வேன்கள் எதிரும், புதிருமாக வந்து செல்ல முடியவில்லை. ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலிலும், போர்டிகோவிலும் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் கார்களில் வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகாவைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ரயில்வே ஸ்டேஷன் வந்து செல்ல பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கின்றனர்.இதனால் பயணிகள் எண்ணிக்கை குறைந்து ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் குறைவு ஏற்படுகிறது.இது போன்ற குறைகளை சரி செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் எதிர்பார்க்கின்றனர். * குறைகளை சரி செய்ய வேண்டும் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகள் ரயில்வே ஸ்டேஷனில் செய்துள்ள நிலையில், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டாவது நடைமேடையில் செல்வதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வாராந்திர மற்றும் சிறப்பு ரயில்களும் நின்று செல்ல ஸ்டாப்பிங் இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளது. முன்பதிவில்லா பெட்டிகள் நிற்கும் இடத்தில் நிழற்குடை இல்லாமல் மழை நேரத்தில் பாதிக்கப்படுகின்றனர்.இத்தகைய குறைகளை சரிசெய்ய ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சாந்தகுமார், உறுப்பினர், மதுரை கோட்ட ரயில்வே பயனாளர்கள் ஆலோசனை கமிட்டி. * பஸ் வசதி தேவை ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக பயணிக்கும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக டவுன் பஸ்கள் இல்லை. இதனால் ஆட்டோகளில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்க ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கவேண்டும். -முனியப்பன், நிர்வாகி, ரயில் பயணிகள் சங்கம். தீர்வுகள் * இரண்டு நடைமேடைகளிலும் முன்பதிவில்லா பெட்டிகள் நிற்கும் இடத்தில் நிழற்குடைகள் அமைக்க வேண்டும். *அத்திகுளம் ரயில்வே கேட் வரை நடைமேடைகளை நீட்டிக்க வேண்டும்.* மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள்,முதியவர்கள் பயணிக்க பேட்டரிகார் வசதி செய்ய வேண்டும். *வத்திராயிருப்பு தாலுகாவில் கான்சாபுரம், இலந்தைகுளம், ஆயர்தர்மம் பகுதிகளில் இருந்து இயங்கும் டவுன் பஸ்களையும், ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து திருத்தங்கல், சிவகாசி வழித்தடத்தில் இயங்கும் டவுன் பஸ்களையும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் வந்து செல்லும் வகையில் இயக்க வேண்டும்.