மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை; அணைகளுக்கு குறைந்த அளவு நீர்வரத்து
வத்திராயிருப்பு; மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி ஸ்ரீவில்லிபுத்துார் நகர் பகுதியில் 15.88 மி.மீ., வத்திராயிருப்பில் 47 மி. மீட்டர் மழை பதிவானது. நேற்று அதிகாலையிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. பிளவக்கல் பெரியாறு அணையில் 13.2 மி.மீட்டர் மழை பதிவான நிலையில் அணையில் தற்போது 18.54 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15.24 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.கோவிலாறு அணையில் 7.4 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் அணையில் தற்போது 11.32 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. மிகவும் குறைந்த அளவு தண்ணீர் வரத்து உள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் பெரும்பாலான கண்மாய்கள் வறண்டு கிடக்கும் நிலையில் தற்போது மழை பெய்ய துவங்கி இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று மதியம் 2:00 மணிக்கு மேல் பலத்த சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவ மழை பெரிய அளவில் பெய்து கண்மாய்கள் நிரம்ப வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.